♥வெளி உறவு!
♥தன் அப்பாவிற்கு, மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அரசல், புரசலாக கேள்விபட்டிருக்கிறாள் உமா. ஆனால், மகளுக்கு தன் கணவனின் விஷயம் தெரிந்தால், அவமானம் என்ற எண்ணத்தில், அம்மா பல தருணங்களில் அதை மூடி, மறைத்து கஷ்டப்படுவதையும் பார்த்திருக்கிறாள். ஒரு விஷயத்தை வெளிப்படையாக பேசுவதை விட, அதை மூடி மறைப்பதற்குத் தான் அதிக சிரமப்பட வேண்டும் என்பது, அம்மாவின் அவஸ்தைகளிலிருந்து புரிந்தது.
♥இரவு நேரங்களில், மகள் தூங்கி விட்டதாக நினைத்து, அம்மா, அப்பாவிடம் விசும்பல்களுக்கு இடையில் மெல்லிய குரலில் போட்ட சண்டைகள், அவள் காதில் விழாமலில்லை. அம்மாவின் அழு குரல் கேட்டு, அவள் தூக்கத்திலிருந்து பலமுறை விழித்திருக்கிறாள்.
'உடல், பொருள், மனம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்னையையும், ஒரு பெண் மற்றவர்களோடு பகிர்ந்து உதவியும், மன சாந்தியும் பெறலாம். ஆனால், தன் கணவனை மற்றொரு பெணணோடு பகிர்ந்து கொள்ள எந்த பெண்ணும் விரும்ப மாட்டாள். கணவனின் வெளி உறவை அறிந்த கணம் முதல், அவள் ஒரு போராளியாக மாறி விடுகிறாள்.
♥தன் முழு பலத்தை பயன்படுத்தி, எதிர்ப்பை வெளிப்படுத்தி, அந்த விரும்பப்படாத உறவை, வேரோடு வெட்டி எறிய தன் சக்தி முழுவதையும் பயன்படுத்துகிறாள். ஆனால், அம்மாதிரி எதிர்ப்புகள், ஆணின் மனதை கடினமாக்கி, வெளி உறவின் வேரை பலப்படுத்தி விடுகிறது என்பது தான் நடைமுறை...' என, தன் அபிமான எழுத்தாளர், ஒரு புத்தகத்தில் எழுதியதை படித்திருக்கிறாள்.
♥அந்த கஷ்டத்தை, தன் அம்மா அனுபவிக்கிறாள் என்பதை அறிந்தபோது, உமாவுக்கு அம்மா மீது பரிவும், பாசமும் பன்மடங்காகியது.
அப்பாவின் வெளி உறவு தனக்கு தெரியும் என்பதை காட்டிக்கொள்ளாமல் இருப்பது, அம்மாவிற்கு மன சாந்தியளிக்கும் என்று நினைத்து, அது பற்றி தெரியாதவள் போல் இருந்தாள்.
♥சிறுநீரக கோளாறுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அப்பா, ஆபரேஷன் முடிந்து படுக்கையில் ஓய்வில் இருந்த போது, உறவினர்களும், நண்பர்களும் வந்து பார்த்து, ஆறுதல் வார்த்தை கூறியது அம்மாவுக்கு தெம்பு அளித்தது. ஆனால், எட்டு வயது சிறுமியுடன், திடீரென்று அங்கு வந்த அந்த நடுத்தர வயது பெண், அப்பாவின் கையைப் பிடித்து ஆறுதல் சொல்லி அழ ஆரம்பித்ததும், அம்மா எரிமலையானாள்.
♥''என் வாழ்க்கைய பங்கு போட்டு நாசமாக்கிட்டு, இங்கேயும் சீராட வந்துட்டியா... என் வாழ்க்கையைத் தான் கெடுத்தே... கல்யாண வயசுல இருக்கிற, என் பெண்ணோட எதிர்காலத்தையும் கெடுத்துடாதே!
''உங்களுக்குள இருக்கிற உறவு, வெளியில தெரிஞ்சுடக் கூடாதேன்னு நான் பயந்துக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா நாலு பேர் முன்னால, என்னை அவமானப் படுத்துறதுக்காவே இங்கே வந்திருக்கே. போதாதுக்கு, உன் குட்டி பிசாசையும் கூட்டிட்டு வந்து அவர் மனச கரைக்கப் பாக்கிறே. உன் ஜாலமெல்லாம் இங்கே நடக்காது; மருந்துகளால், ஏற்கனவே பாதி மயக்கத்தில இருக்கிற அந்த நல்ல மனுஷன, உன் பசப்பல் வார்த்தைகளால் முழுசா மயக்கப் பாக்காதே... நல்ல வேளை இங்க யாரும் இல்ல; உடனே இங்கிருந்து போயிடு. இல்லன்னா நடக்கிறதே வேற,'' வெளியில் போயிருந்த மகள், அறைக்கதவை ஓசைப்படாமல் திறந்து, உள்ளே வந்து பின்னால் நிற்பதை உணராமலேயே, உணர்ச்சி வயப்பட்டு கத்தினாள் அம்மா.
♥வார்த்தைகள் வெளியே வராமல், அப்பாவின் கண்களில் கண்ணீர் மட்டும் வழிந்தோடியது. அம்மாவை சமாதானப்படுத்த, ஊசிகள் மூலம் ரப்பர் குழாயில் இணைக்கப்பட்டிருந்த தன் இரு கைகளையும் சிரமப்பட்டு ஒன்று சேர்த்து வணங்க முயற்சித்தார். அவருடைய மன வருத்தம், புருவ மடிப்புகளின் இடம் மாறுதல்கள் மூலம் வெளிப்பட்டது.
குட்டி பிசாசு என்று அம்மா அழைத்த அந்த சிறுமியை, சைகை காட்டி அழைத்தார் அப்பா. ஆனால், அம்மா அதற்கு துளியும் அனுமதிக்கவில்லை. ஏமாற்றமும், ஏக்கமும் நிறைந்த பார்வையால், திரும்பி பார்த்துக் கொண்டே அந்த இருவரும் அங்கிருந்து நகர மனமின்றி சென்றனர்.
♥''நான் ரொம்ப துர்பாக்கியசாலி; இந்த கண்றாவி உனக்கு தெரியக் கூடாதுன்னு தான் இத்தனை காலமாக, மறைச்சு வச்சிருந்தேன். இப்ப, உனக்கு தெரிய வந்திடுச்சு,'' அம்மா, மகளின் தோளில் முகம் புதைத்து அழத் துவங்கினாள்.
அம்மாவை சமாதானப்படுத்தாமல், அவள் அழுது தீர்க்கட்டும் என்று காத்திருந்தாள்.
''நடந்தது நடந்து போச்சு; தப்பு பண்ணவர் உன்னோட கணவர்; என்னோட அப்பா.
♥எதனால, எந்த சந்தர்ப்பத்தில, அந்த பெண்ணோடு இவருக்கு உறவு துளிர்த்ததுன்னு கேட்டு, பழசக் கிளறி, உன் மனக் காயத்த அதிகப்படுத்த விரும்பல. இதில பாதிக்கப்பட்ட உனக்கு என்னுடைய முழு ஆதரவும் உண்டும்மா,'' அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி தேற்றினாள் உமா.
''உங்க அப்பா ரொம்ப நல்லவர்டி; அவர் மேல் எந்த தப்பும் இல்ல. அவரோட அலுவலகத்தில கொஞ்ச நாள் தற்காலிகமா வேலை பார்த்த இவ தான், அவரை மயக்கிட்டா... அவளோட குலம், கோத்திரம் தெரியாம அப்பாவியான இவர், அவள் விரிச்ச வலையில விழுந்துட்டார்.
♥எல்லாம் என் தலையெழுத்து; தற்செயலா, இந்த விஷயம் தெரிய வந்ததும், வெட்டி விட்டுட்டேன். ஆனா, திடீர்னு இங்கே வருவான்னு எதிர்பாக்கல. மறுபடியும் இந்த ஊருக்கே வந்துட்டா போலிருக்கு,'' என்றாள் அம்மா.
ஆபரேஷனுக்குப் பின், பிழைத்து விடுவார் என்று நினைத்த அப்பா பிழைக்கவில்லை. அப்பா மீது அம்மா வைத்திருந்த அன்பு, பாசம், மரியாதை அனைத்தும், அவர் காரியங்களின்போது அம்மா புலம்பி அழுததிலிருந்து வெளிப்பட்டது.
♥''உமா, அவர் சம்பாத்தியத்தில கட்டிய இந்த வீட்டை வித்துட்டு, நாம வேற ஊருக்கும் போயிடலாம்; அப்பத்தான், அவரோட வெளி உறவு வந்து போவத தவிர்க்க முடியும். உனக்கும் கல்யாணத்திற்கு வரன் பாக்க ஆரம்பிக்கணும்,''என்றாள்.
விளம்பரம் கொடுத்ததும், வீடு, விரைவில் விலை போனது. அம்மாவிடம் வங்கி வரவு, செலவு புத்தகத்தை காட்டினாள் உமா.
''முப்பது லட்சம் விலைன்னு பேசினேயே... 15 லட்சம் தான், பேங்க் இருப்பு காட்டுது. மீதி பணம் அப்புறம் கொடுப்பாங்களா?'' அம்மா தன் சந்தேகத்தை தயக்கத்துடன் வெளிப்படுத்தினாள்.
♥''பாக்கி பணம் சேர வேண்டியவங்களுக்குப் போய் சேர்ந்துடுச்சு,''என்றாள் உமா.
''என்னடி சொல்றே?''என்றாள் புரியாமல் அம்மா.
''அப்பாவோட மரணத்தால் பாதிக்கப்பட்டது நீ மட்டும் இல்லம்மா; அந்த பட்டியலில் இன்னும் இரண்டு ஜீவன்களை சேக்கணும். அப்பாவின் வெளிஉறவான, அந்த பெண்ணை வில்லியாக சித்தரிப்பது நியாயம்ன்னு எனக்கு தோணல. அதற்கான பொறுப்பு அப்பாவையும் சாரும். அவர் செய்த தவறுக்கு, நாமும் பொறுப்பு ஏற்றுக் கொள்வது தான் தார்மீகம். என்னோட எதிர்காலத்தப் பத்தி கவலைப்படுகிற நீ, அப்பாவின் வெளி உறவில் உதித்த, அந்த எட்டு வயது பொண்ணப் பத்தியும் சிந்திச்சுப் பாக்கணும்.
♥''அந்தப் பொண்ணுக்கு, குட்டிப் பிசாசுன்னு பெயர் சூட்டினால், நான் பெரிய பிசாசு. அவள் எனக்கு தங்கை. அவளுடைய எதிர்காலத்தப் பத்தி கவலைப்பட வேண்டியது நம்மோட கடமை.
''அவங்க ரெண்டு பேருக்கும் ஆதரவு காட்ட யாருமில்லன்னு தெரிஞ்சது. அதனால் தான், வீடு விற்று வந்த பணத்தில் பாதிய, அவ பெயருக்கு கணக்கு துவங்கி, அதில் செலுத்திட்டேன். ஒரு பெண்ணிற்கு இன்னொரு பெண்தான்ம்மா ஆதரவாக இருக்கணும்; அந்த ஆதரவு எண்ணம் இருந்தால், துரோக சிந்தனைகள் தள்ளிப் போகும். துரோக சிந்தனைகள் துளிர் விடுவதற்கு முன், அவங்களுக்கு நியாயமாக சேர வேண்டியத, நான் கொடுத்துட்டேன்.
♥உடனடியாக இல்லையென்றாலும், நாளடைவில், நீயும் இதுக்கு சம்மதிப்பேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு,''என்று கூறிய உமா, தான் சொல்ல நினைத்ததை சொல்லி முடித்துவிட்ட திருப்தியில், அம்மாவின் தோளில் சாய்ந்தாள். அவள் தேக்கி வைத்திருந்த கண்ணீர், அம்மாவின் தோளை நனைத்தது.
♥கணவனின் வெளி உறவால் பாதிக்கப்பட்ட அம்மா, இறக்கும் தருவாயில் வெளி உறவால் பிறந்த மகளை கட்டி அணைத்து, தன் அன்பை வெளிப்படுத்த முடியாமல், வெதும்பி தவித்த அப்பா, 'அப்பாவின் வைப்பாட்டி' என்று அவப்பெயரை தாங்கி நிற்கும் பெண், தந்தை உறவு அறுந்து வளர்ந்த சிறுமி ஆகிய அனைவருக்கும், அந்த அழுகை சமர்ப்பணம் செய்யப்பட்டது.
எஸ்.ராமன்
0 Comments
Thank you