#குழந்தை ஏன் அழுகிறது?
"இத்தனை மோசமான உலகத்திலேயா பிறக்கிறோம்" என்ற அங்கலாய்ப்பால் தான் குழந்தை அழுகிறது என்று சிலர் வேடிக்கையாக அல்லது வேதாந்தமாகக் கூறுவதுண்டு.
இவ்வுலகில் சந்திக்கப் போகும் துன்பங்களைப் பற்றிச் சிந்தித்தே குழந்தை அழுகிறது என்று கருத்து சொல்பவர்களுண்டு.
ஆனால், உற்றாரும் உறவினரும் “குவா குவா” என குழந்தை அழும் சத்தத்திற்காகவே மிக மிக ஆவலோடு பிரசவ அறைக்கு வெளியில் காத்துக் கிடப்பார்கள்.
பிறக்கும் குழந்தை அழுதால் தான் 'உயிரோடு பிறந்தது' என்று மகிழ்ச்சி அடைகின்றனர்.
பிறந்த குழந்தை அழவில்லை என்றால், குழந்தைக்கு 'உயிர் கொடுக்க' மருத்துவர்கள் அவசர உதவி செய்கிறார்கள் என்று பொருள்.
குழந்தையைக் கிள்ளியோ தட்டியோ அதன் உடலில் தூண்டல்களை ஏற்படுத்தியோ அழ வைக்க முயற்சி செய்கிறார்கள்.
குழந்தை பிறக்கும்போதே அழுகை அவ்வளவு அத்தியாவசியமாகிறது.
அதெல்லாம் இருக்கட்டும். பிறக்கும் குழந்தை ஏன் அழுகிறது என்பதற்கு மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?
குழந்தையின் முதல் அழுகையே அதற்கு முதல் மூச்சாக அமைகிறது.
குழந்தை தன் தாயின் கருப்பையில் வளர்கிற வரையில் தொப்புள்கொடியின் மூலமாக தாயின் இரத்தத்திலிருந்து தனக்குத் தேவையான உணவுச் சத்தையும் பிராண வாயுவையும் பெறுகின்றது.
அப்போது நுரையீரல் செயல்படுவதில்லை..
குழந்தை பிறக்கும்போது தொப்புள்கொடியை அறுத்து, தாயிடமிருந்து பிரித்துவிடுவர்.
அப்பொழுது தான் குழந்தைக்குப் பிராணவாயு என்னும் மூச்சுக்காற்று 'நேரடியாகத்' தேவைப்படுகின்றது.
வெளியுலக தட்பவெப்பநிலை அதன் உடம்பில் சில தூண்டல்களை ஏற்படுத்தும்.
வெளிப்புறக் காற்றழுத்தம் ஒரு புறம். குழந்தையின் இரத்தத்தில் கரியமில வாயுவின் தாக்கம் மறுபுறம்.
இதற்கிடையில் வெளிப்புறக் காற்று புற நாசித் துளை மற்றும் வாய் வழியாகச் செல்ல, ஒரு வித அவஸ்தைக்கு உள்ளாகும் குழந்தை அழத் துவங்குகிறது.
அந்த அழுகையே அதன் 'முதல் மூச்சாக' ஆகி நுரையீரலை செயல்பட வைக்கிறது.
குழந்தைக்கு அழுகையே முதல் மூச்சு..
0 Comments
Thank you