♥மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? இந்த 7 விஷயம் ரொம்ப முக்கியம்!
1) #நேர்ப்பேச்சு
♥சில பெண்கள் நேரடியாக ஒரு விஷயத்தைக் கூறாமல் சுற்றி வளைத்துப் பேசுவார்கள். ஆண்களுக்கு பெரும்பாலும் அதைக் கேட்பதற்கு பொறுமை இருப்பதில்லை. இப்ப என்ன தான் சொல்ல வர்றே? என்று கத்துவார்கள். ஜாடை பேசுவது, பொருட்களை நங்கென்று வைப்பது, பிள்ளைகளை அல்லது வேறு யாரையோ திட்டும் சாக்கில் கணவனை இடித்துரைப்பது போன்றவற்றை மனைவியானவள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அந்த இல்லறத்தில் விரிசல் விழக் கூடிய சாத்தியங்கள் அதிகம் உண்டு. ஒரு சில வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தை பளிச்சென்று சொல்வதே சிறப்பு. மேலும் எல்லா விஷயங்களும் இருவரும் ஒளிவு மறைவின்றி விவாதிக்க வேண்டும்.
2) #கேள்விகள்
♥அனேக ஆண்கள் கேள்விகள் கேட்கப்படுவதை விரும்புவதில்லை. வீட்டிலிருந்து மனைவி செல்ஃபோனில் பேசும் போது எடுத்தவுடன் எங்க இருக்கீங்க? என்ன செய்யறீங்க போன்ற கேள்விகளைத் தவிர்க்கலாம். தேவையிருப்பின் அவர்களே கூறுவார்கள். வீட்டுக்குள் நுழையும் போதும், ஏன் இவ்ளோ லேட்? எங்க ஊர் சுத்திட்டு வர்றீங்க? அல்லது நீங்க எங்க போயிருப்பீங்கன்னு தெரியும் போன்ற கேள்விகள் கணவர்களை எரிச்சலுக்குள்ளாக்கும். ஒருவருக்கொருவர் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையுடன் வாழ்தல் வேண்டும். கணவரும் தமது நிகழ்ச்சி நிரல்கள் மொத்தத்தையும் ஒப்பிக்க முடியாவிட்டாலும், இந்த நேரத்தில் இங்கிருப்பேன், இந்த நேரத்துக்கு வீடு திரும்புவேன் என்பதை மனைவிக்கு தெரிவித்துவிட்டால் அவர்கள் ஏன் நச்சரிக்கப் போகிறார்கள்?
3) #தேவையில்லாத_சச்சரவு
♥யார் போன்ல உங்க தங்கச்சியா என்று ஃபோன் பேசி முடியும் வரை அருகிலேயே இருப்பது, கணவரின் பெற்றோர்களை மதிக்காமல் இருப்பது போன்ற விஷயங்கள் குடும்ப ஒற்றுமைக்கு நல்லதல்ல. கணவன் மனைவி இருவரும் ஒருவர் பெற்றோர்களை மற்றவர்கள் மதித்து நடக்க வேண்டும். சீரியலில் பார்க்கும் சண்டைகளை குடும்பத்துக்குள் இழுத்து வரக் கூடாது.
♥கணவன் எடுக்கும் முயற்சிகளுக்கு மனைவி உறுதுணையாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, அது சரிப்பட்டு வராது, உங்களால் முடியாது என்று முட்டுக்கட்டை போடும் மனைவிகள் மீது கணவருக்குத் தீராத எரிச்சல் ஏற்படும். மாறாக கணவர் அகலக்கால் எடுத்து வைக்கிறார் என்று மனைவி நினைத்தால், அதனைக் காரண காரியத்துடன் பொறுமையாக விளக்கி அவருக்குப் புரிய வைக்க வேண்டும். சிலருக்கு பட்டால்தான் புத்தி வரும் என்று தோன்றினால் பட்டுத் தெளிய விட்டுவிட வேண்டும். அதன் பின் நான் தான் அப்பவே சொன்னேனே நீங்க கேட்டாதானே என்று தோல்வியுற்ற சமயத்தில் மீண்டும் இடித்துரைக்கக் கூடாது. பரவாயில்லை எவ்வளவோ கஷ்டப்பட்டுட்டோம், இதையும் கடந்துட முடியும் என்று நம்பிக்கையுடன் ஒரு மனைவி தோள் கொடுக்க வேண்டும்.
4) #நினைவுத்_திறன்
♥பெண்களுக்குப் பொதுவாக நினைவுத் திறன் அதிகம். அதற்காக அன்னிக்கு அப்படி சொன்னீங்களே, மூணு வருஷத்துக்கு முன்னாடி அப்படி இப்படி நடந்தவரு நீங்க தானே என்பது போன்ற குத்திக் காட்டல்களை ஆண்கள் விரும்புவதில்லை. நல்ல விஷயங்களை எதுவும் சொல்லிக் காட்டாமல் கணவர் சறுக்கிய விஷயங்களை அலசி ஆராய்ந்து அவ்வப்போது சுறுக்கென்று குத்தும் இயல்பு இருந்தால் உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள். மன்னிப்பதும் மறப்பதும் இனிய தாம்பத்தியத்தின் அத்தியாவசிய குணங்கள்.
5) #புரிந்துணர்வு
♥நீங்க எப்ப தான் என்னை புரிஞ்சுக்கப் போறீங்களோ என்று அடிக்கடி சொல்லும் மனைவியைப் பார்த்தால் கணவனுக்கு கோபம்தான் வரும். காரணம் அவர்களும் அதே நிலையில் தான் இருப்பார்கள். நீ தான் என்னை புரிஞ்சி நடத்துக்கணும் என்று இருவருமே ஏட்டிக்குப் போட்டியாக நின்றால் நாளாவட்டத்தில் குடும்ப நீதிமன்ற வாசலில்தான் நிற்க வேண்டிவரும். எனவே நான் நீ என்ற பேதமைகளை மறந்து நாம் என்ற ஒற்றுமையான புரிந்துணர்வு இருவருக்கும் தேவை.
#6) பாராட்டுதல்
♥சில பெண்கள் குற்றம் குறைகளை பூதக் கண்ணாடி போட்டுப் பார்பார்கள். ஆனால் தன் கணவர் செய்யும் சில நல்ல விஷயங்களை ஒரு போதும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஒருவருக்கொருவர் தட்டிக் கொடுப்பதும், பாராட்டிக் கொள்வதும் உற்சாகத்துடன் வாழ்க்கையை நடத்திச் செல்ல வைக்கும். போலவே, ஒருவருக்கு ஒருவர் நன்றி சொல்லிக் கொள்வதும் ஒரு நல்லியல்புதான். வார்த்தைகளில் சொல்லவில்லை என்றாலும் உணர்வுகளில் அது கூடி இருக்கலாம். நம் கணவர் குடும்பத்துக்காக இப்படி ஓடியோடி உழைக்கிறார் என்றும், மனைவி தனக்காக வேலைக்குச் சென்று தன் சுமையைக் குறைக்கிறாள், வீட்டையும் திறமையாக நிர்வகிக்கிறாள் என்று கணவரும் நினைக்க வேண்டும்.
7) #அன்பு
♥ஒரு குடும்பத்தில் அதிகாரம் ஆட்சி செலுத்தினால் அங்கு சந்தோஷம் தங்காது. அன்பின் பகிர்தல்களே ஆனந்தத்தின் அடிப்படை. இனிய தாம்பத்தியத்தில் உடல்மொழிகளை விட மனத்தின் ஒத்திசைவுகளே அழகைக் கூட்டும். ஈகோ, பொறாமை, கோபம், வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்வுகளை ஒருபோதும் கணவன் மனைவி இருவருக்கிடையில் அனுமதிக்கக் கூடாது.
♥கணவன் மனைவிக்கு இடையே எவ்வித பிரச்னை ஏற்பட்டாலும் அதை அவர்களே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். வார்த்தைகள் தடிக்க விடாமல், நிதானமாக யார் மீது தவறு உள்ளது என்பதை உணர்ந்து அதைத் தவிர்த்துவிட்டால் இல்லறம் என்ற நல்லறம் என்றென்றும் தொடர்ந்திருக்கும்
0 Comments
Thank you