♥மரமல்ல அது என் தம்பிங்க
♥அந்த சிறுமியி்ன் அழுகையை யாராலும் நிறுத்தவும் முடியவில்லைஅப்படி தேம்பி தேம்பி அழுகிறார்.
♥பெற்றோர் உறவினர் என்று மாறி மாறி வந்து சமாதானப்படுத்துகின்றனர், ஒரு சில வினாடிதான் முகம் மவுனம் மேற்கொள்கிறது அடுத்த வினாடியே நின்று போன அழுகை குமுறிக்கொண்டு வருகிறது, அந்த சில வினாடிகள் அடக்கிவைத்திருந்த கண்ணீர் ஊற்றாக வெளியேறுகிறது அழுது அழுது கண்களும் முகமும் வீங்கி காணப்படுகிறது.
♥யார் இந்த சிறுமி எதற்காக இப்படி குமுறி குமுறி அழுகிறார் என்பதை அறிந்தால் ஆச்சரியப்பட்டு போவீர்கள் அதே நேரம் அந்த சிறுமியின் பாசத்தை நினைத்து நெகிழ்ந்தும் போவீர்கள்.
♥மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 48 கிலோமீட்டர் துாரத்தில் உள்ளது காக்சிங் என்ற ஊர்.இங்குள்ள ஆற்றாங்கரையை ஒட்டிய குடியிருப்பில் வசிப்பவர் பிரேம்குமார்.
இவரது மகள் வாலன்டினாவிற்கு தற்போது பத்து வயதாகிறது உள்ளூர் பள்ளி ஒன்றில் ஐந்தாவது படித்துக் கொண்டு இருக்கிறார்.
♥இவர் முதல் வகுப்பில் படிக்கும் போது சுற்றுச்சுழலின் அவசியத்தைக் கற்றுக் கொடுத்த ஆசிரியரின் அறிவுரைப்படி தன் வீட்டு வாசலை ஒட்டிய பகுதியில் இரண்டு மரக்கன்றுகளை நட்டு வளர்த்தார்.
வேளை தவறாமல் தண்ணீர் ஊற்றுவது,நன்கு பராமரிப்பதுடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த மரத்திடம் விளையாடுவது பேசுவது என்று நிறைய பாசம் வைத்திருந்தார்.
♥குல்மோஹர் இனத்தைச் சார்ந்த இந்த மரக்கன்றுகள் சிறுமியின் அன்பான வளர்ப்பின் காரணமாக நன்கு வளர்ந்து பூக்களை சிறுமிக்கு பரிசாக வழங்கிக்கொண்டு இருந்தது.
ஒரு நாள் சிறுமி பள்ளிக்கு சென்று திரும்பிவந்து பார்த்த போது பயங்கர அதிர்ச்சி.தான் ஆசையாக வளர்த்திருந்த மரங்கள் இரண்டும் வெட்டப்பட்டு கிடந்தது.
சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அதிகாரிகள் வெட்டிய மரங்களில் சிறுமி வளர்த்த இரண்டு மரங்களும் உண்டு.
♥இது எல்லோருக்கும் மிகச் சாதராணமான விஷயம் ஆனால் சிறுமிக்கு தாங்க முடியாத துயரத்தைக் கொடுத்துவிட்டது மரம் கிடந்த இடத்தை சுற்றி சுற்றிவந்து அழுதார். அவரை யாராலும் சமாதானப்படுத்தவோ அழுகையை நிறுத்தவோ முடியவில்லை.
நான் எப்படி வளர்த்தேன் தெரியுமா? அதுங்க என் தம்பிங்க ஆசைஆசையாய் வளர்த்தேன் வெட்டிட்டாங்களே வெட்டிட்டாங்களே என்று அழுதபடியே இருந்தார்.
♥வளர்த்த மரத்தை வெட்டியதை தாங்கமுடியாமல் அழுத சிறுமியின் அழுகையை ஒருவர் மொபைல் போன் மூலமாக வீடியோ எடுத்து வெளியிட அது முதல் அமைச்சர் பைரன்சிங் பார்வைக்கு சென்றது. உடனடியாக அதிகாரிகளை அனுப்பி சிறுமியின் மூலமாக மீண்டும் அதே ஆற்றாங்கரையில் இருபது மரக்கன்றுகளை நட ஏற்பாடு செய்தார் அதைவிட பெரிய காரியமாக மணிப்பூர் மாநிலத்தின் பசுமை திட்ட துாதராக நியமித்தார்.
♥மரத்தின் மீது இவ்வளவு பாசம் கொண்ட இந்த சிறுமியைவிட சிறந்த துாதர் கிடைக்கமாட்டார் என்று முதல்வர் விளக்கமும் கொடுத்தார்.
மணிப்பூர் மாநிலத்தின் பசுமை இயக்கம் தொடர்பான அரசு விளம்பரங்கள் இனி சிறுமி வாலன்டினாவின் படம் தாங்கியே வரும். மரம் நடுவிழாக்களில் வாலன்டினா சிறப்பு விருந்தினராக இருப்பார். இதற்காக தனியாக ஊதியம் போக்கு வரத்து செலவு மற்றும் சிறப்பு சலுகைள் வழங்கப்படும்.
♥இதெல்லாம் சிறுமி வாலன்டினாவிற்கு புரியவும் இல்லை பெருமையும் இல்லை மீண்டும் இருபது மரங்களை நட்டதன் காரணமாகவும் இன்னும் நிறைய மரங்கள் நடமுடியும் என்பது மட்டுமே அவரது அழுகையை நிறுத்தியது. பின்னாளில் நிறயை மரங்கள் வளர்க்கலாம் என்பதால் வன அதிகாரியாகத்தான் வருவேன் என்றும் உறுதிபடக்கூறுகிறார்.
♥ஒவ்வொரு மாநிலமும் காட்டை அழித்து கான்கீரிட் கட்டிடங்களை எழுப்பி்க் கொண்டு இருக்கையில் மணிப்பூர் மாநிலம் மட்டுமே 263 கிலோமீட்டருக்கு காடுகளை விரிவு படுத்தியுள்ளது இந்த சிறப்பு இனி சிறுமி வாலன்டினாவின் மூலம் கூடுதலாகும் என்பது மட்டும் உறுதி.
எல்.முருகராஜ்
0 Comments
Thank you