குழந்தை இல்லா பெண்ணின் கதறல்
மாதத்தின் மூன்று நாட்களின் போது ஒரு சில நாட்கள் தள்ளிப்போனாலும் நீ தான் வந்திருக்கிறாயோ என சந்தோஷத்தில் பொங்குகிறேன்!
பாவாடை நாடாவை கூட வலிக்குமோ என்று தளர்வாய் கட்டி வழுக்கிவிடாதபடி அவ்வப்பொழுது பிடித்துக்கொள்கிறேன்!
காட்டன் புடவைகளை தவிர எதையும் கட்டுவதில்லை வெப்பத்தில் நீ கலைந்துவிடுவாயோ
என பயந்து!
கலவி என்பதே மனதையும் உடலையும் ஒருமிக்க செய்யும் ஒருவித தியானம் போன்ற மெய்மறந்த உணர்வுதான்,
அந்த உணர்வின் சுகத்திற்கு கூட அடிமையாகாமல் நீ உருவாகியிருப்பாயோ இந்நேரம் என்றுதான் எனக்குள் நானே எதிர்ப்பார்த்துக்கொண்டு இருப்பேன்!
என் வயிற்று தொப்புள்
என் தாயை நினைவு படுத்துகிறது,
நான் தாயாகாமல் இருப்பதையும் நினைவு படுத்துகிறது!
உணவால் மட்டுமே இந்த வயிறு நிரம்பிக்கொண்டு இருக்கிறது,
உன்னால் நிரம்பவேண்டும்
வா என் கண்மணியே!
உணவை சுமந்தது போதும்
உன்னை சுமக்க வேண்டும்
வா எங்கே இருக்கிறாய்!?
அம்மா என்று யார் அழைத்தாலும் உன் ஞாபகம் தான் வருகிறது!
நாற்பதை நெருங்க நெருங்க நாடி நரம்பெல்லாம் படபடக்கிறது!
உன்னை சுமக்க முடியாத என்னை ஏன் சுமந்தாய் என்று என் தாய்மீது கோபம் வருகிறது!
என் வலியை என் தாய்க்கு நான் தரவில்லை என்று சந்தோஷப்படுகிறேன்!
என் பிள்ளை தானே நீ,
நீயும் நீயில்லாத வலியை
உன் தாய்க்கு தந்துவிடாதே!
இதயத்தை இயங்கச்செய்யும் கடைசி கொஞ்ச ரத்தம் இருக்கமென்றாலும் அதில்கூட கருமுட்டை உருவாக்கித்தான் உனக்காக காத்திருப்பேன்!
எங்கே இருக்கிறாய்
வந்துவிடு என் செல்லமே!!
0 Comments
Thank you