மனைவிக்கு கவிதை
____________________________
எங்கோ ஓர் மூலையில்
சுற்றித்திரிந்த
என் ஆன்மாவின் கதறலை
ஆக்கிரமிப்புச் செய்து
உவகையில் அலங்கரித்து
சீர்தூக்கி மகுடம் சூடிய
என் தோழி நீதானடி
வெட்கம் பூண்ட
என் அகத்திரையில்
வேட்கை கொண்ட
பூ மலராய் உதிர்த்து
புன்னகை இதழ் விரித்து
என்னகை மனம் சூடிய
என் கள்ளி நீதானடி
மண் மீதும் விண் மீதும்
பொன்னுருவம்
தினம் கொண்டு கண்களிலே
கதைகள் பல பேசி
கவிதைகளில் உறைந்துவரும்
சொற்பதத்தின் காதலி நீதானடி
சின்னச் சின்ன சண்டை
சீக்கிரத்தில் தீர்வு
குறும்புகளின் வண்ணம்
எழில் கொஞ்சும் பேச்சு
கூடி வரும் துன்பங்களும்
உனைத் தேடுகையில்
எங்கேயோ தொலையுதடி
விட்டுக் கொடுக்காத பாசம்
தட்டிவிடா நேசங்கள்
தழுவிய சொந்தங்கள்
வேர் போல பல இருக்க
தலாட்டுப் பாடியென்னை
மடிமீது தூங்க வைக்கும்
மகத்துவத்தை என்னவென்று
வரிகளில் நான் கூற
சோகமாய் நானிருக்க
சுமை தீர்க்க வந்தவளே
கடமைகளை தொலைத்திருந்தும்
என் உடமைகளை காத்தவளே
நடைபிணமாய் திரிந்யெனை
உயிரூற்றி உருமாற்றி ஈன்றவளே
தாயென்று உனைக்கூற
அத்தனை பிரியமடி
நான் வாழும் ஆயுள் சிறிதுதான்
ஆனாலும் கலக்கமில்லை
கண்ணிமைக்கும் நேரங்களில்
நான் கடந்தாலும் கலங்காதே
கடலிலும் ஆழமாய்
உன் மனதினில் பிறந்திருப்பேன்
காலங்கள் கடக்கையிலும்
கருவாக நானிருப்பேன்
துன்பங்கள் நெருங்கையிலும்
துணையாகி வீற்றிருப்பேன்
சா வந்து அழைத்தாலும்
உன் விழியை காதல் செய்வேன்
விடைபெற்று காற்று
என்னுடலை விட்டாலும்
என் கரமோ உன் கரத்தைப்
பற்றியே தானிருக்கும்
பிரியங்கள் அன்பே
0 Comments
Thank you