♥அழைப்புமணி ஒலி கேட்டு, சிரித்த முகத்தோடு கதவைத் திறந்த வாணியை புன்னகைத்தபடி அழகாய் அணைத்துக் கொண்டான் அவள் கணவன் தினேஷ்.
♥அவனின் கைப்பையை வாங்கியவள் முகம் கழுவிட்டு வாங்க காபி தரேன் என பையை மேசையில் வைக்க அவனின் பையில் இருந்து வந்த மல்லிகை மணம் அறை முழுக்க பரவியது.
♥இன்னைக்கும் ஏங்க பூ வாங்கிட்டு வந்தீங்க நேத்து வாங்கினதே இன்னும் ஃப்ரிட்ஜில இருக்கு என அவள் கேட்க..
♥நீ தலை நிறைய பூ வச்சிக்கிட்டா மகாலட்சுமி மாதிரி இருப்பனு எத்தன தடவை சொல்லிருக்கேன். அதுக்கு தான் இவ்ளோ பூ என அவன் சாதரணமாக பதில் அளிக்க. சரிதாங்க என சிரித்தபடியே தலையை ஆட்டிவிட்டு தலை நிறைய பூவை வைத்து விட்டு அடுப்படிக்குள் சென்றாள்.
♥பாலை சூடு செய்து கொண்டிருந்தவளை பின்னால் இருந்து அவன் தொந்தரவு செய்ய ஐயோ விடுங்க என தன்னை விடுவித்துக் கொண்டவள் செல்லமாய் அவனை முறைத்து விட்டு பாலை ஊற்றத் தொடங்கினாள்..... என எழுதிப் புள்ளி வைப்பதற்கும் டிங் டிங் என காலிங் பெல் சத்தம் கேட்பதற்கும் சரியாய் இருந்தது.
♥கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தவள் எழுதிக் கொண்டிருந்த பேப்பர் பேனாவை கீழே வைத்துவிட்டு வேகமாய் சென்று கதவைத் திறக்க...
♥உடனே வந்து கதவ திறக்க முடியாதா அப்படி என்னத்த செஞ்சிட்டு இருந்த என ஷூ வை கழட்டி எறிந்துவிட்டு அவள் கை நீட்டி பையை கேட்க அதை சட்டை செய்யாமல் பையை மேசைமேல் வீசிவிட்டு காபி கொண்டுவா என்றான் அவள் கணவன்.
♥இதோ ஐந்து நிமிசங்க என அவள் விரைந்து சென்று பாலை எடுப்பதற்காக ப்ரிட்ஸை திறக்க, இது தான் வர நேரம்னு தெரியும்ல காபி போட்டு வச்சா என்ன. வீட்டுக்கு வரவே எரிச்சலா இருக்கு எனக் கத்திவிட்டு ஒரு கையில் போனையும் மறுகையில் ரிமோட்டையும் எடுத்துக் கொண்டு சோபாவில் சாய்ந்தவன் இதுல குப்பை வேற என அவள் ஒரு பத்திரிக்கைக்கு எழுதிக்கொண்டிருந்த காதல் கதை தாங்கிய அந்தக் காகிதங்களை வீசி எறிந்தான்..
♥காபியை அவனிடம் கொடுத்துவிட்டு கீழே கிடந்த காகிதங்களை எடுத்து அறைக்குள் சென்றவள்..
♥வாணி அவனிடம் காபியை கொடுக்க ஆகா பிரமாதம் என சப்புக் கொட்டி குடித்தான் அவள் கணவன் என எழுதுவதற்கும் காபியா இது சீ நாய் கூட குடிக்காது என வெளி அறையில் அவள் கணவன் படாரென்று டம்ளரை வைத்ததற்கும் சரியாக இருந்தது.
♥விழியில் உருண்ட நீரைத் துடைத்துவிட்டு அடுத்த கற்பனை வரியை எழுத ஆரம்பித்தாள் வாணி.
0 Comments
Thank you