♥#எளிமையான_நிகழ்ச்சி; #எல்லாருக்கும்_மகிழ்ச்சி!
♥வெளிநாட்டில் உள்ள என் உறவினர் மகன், கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலில், குழந்தைகளுக்கு காது குத்து நிகழ்ச்சியை நடத்துவதற்காக, தன் குடும்பத்தோடு வந்திருந்தார். தன் அப்பாவிடம், 'காது குத்து விழா விமரிசையாக இருக்கணும்; பணத்தை பற்றி பிரச்னையில்ல. பந்தல், அலங்காரம், மேள, தாளம்ன்னு அசத்தணும்...' என்றான்.
♥'கோவில்ல வச்சு முடி இறக்கி, காதணி விழா நடத்தப் போறீயா... இல்ல புது பணக்காரனான பெருமைய, தம்பட்டமடிச்சு காட்டப் போறீயா... நம்ம ஊர் இன்னமும் ஏழை பாழைகள் நிறைந்த ஊராத் தான் இருக்கு; நேத்து வரைக்கும் நாமும், அப்படி தான் இருந்தோம். எளிமையா இருந்தாத்தான், அவங்க நம்ம கிட்ட மனம் விட்டு பேசி, நெருக்கமா பழகுவாங்க.
'பணம், ஆடம்பரம்ன்னு அலட்டினால், மிரண்டு போய், விலகிடுவாங்க.
♥அங்க போய், நம்ம புது வசதியை காண்பிக்கறது, அவங்கள பழிக்கிற மாதிரி இருக்கும். ஊருக்கெல்லாம் சாப்பாடு போட்டு, விசேஷத்தை எளிமையா நடத்தலாம்; இதுக்கு சரின்னா, கிராமத்துல வச்சுக்கலாம்; இல்ல விமரிசையா செய்யணும்ன்னா, அதை நகரத்துலயே மண்டபத்துல நடத்திக்கலாம்...' என்று திட்டவட்டமாக கூறினார், அவரது தந்தை.
♥ஆரம்பத்தில் முரண்டு பிடித்தாலும், பெரியவரின் பேச்சில் இருந்த உண்மையை புரிந்து, கார்களை தவிர்த்து, பஸ்சில் பயணம் செய்து, கிராமத்து வீட்டில் தங்கி, ஊர் பொது மக்கள் புடை சூழ, காதணி விழாவை நல்லபடியாகவும், திருப்திகரமாகவும் நடத்தி திரும்பினார்.
♥'அமெரிக்கா போனாலும், நம்ம வம்சத்து புள்ள, எளிமையா இருக்கான்; இங்கேயும் சிலதுங்க இருக்குதுங்களே... நாலு பணம் பாத்துட்டால், உடனே, கொம்பு முளைச்சு, ஊர் என்ன விலை, நாடு என்ன விலைன்னு கொக்கரிக்குதுக...' என்று ஊரார் பேசிக் கொண்டதை கேட்க முடிந்தது.
♥பெரியவங்க சொன்னா, பெருமாள் சொன்ன மாதிரி என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. புரிந்து நடப்பது தான் புத்திசாலித்தனம்!
— எஸ்.பரணி, சென்னை.
0 Comments
Thank you