♥டைவர்ஸ் ( ஒரு பக்க கதை)
♥கதவைத் திறந்த லஷ்மி, “நீயா…?” என்று அஸுவாரஸ்யாமாக சொன்னபடி திருப்பிக்கொண்டு நடந்தாள்.
“என்னம்மா… வான்னு கூட சொல்ல மாட்டியா?”
“அதான் வந்துட்டியே… போன்னு சொன்னா போயிடுவியா? வந்த வேலை முடியணுமே”
“உன்னைப் பாக்கணும்ன்னு ஆசையிலே வந்தேன்”
“அடடா…என்ன ஆசை, என்ன பாசம்!”
“ஏம்மா, பெத்த பொண்ணு அம்மா மேலே ஆசையா இருக்கிறது உனக்கு கிண்டலா இருக்கா?”
♥“ஆச்சரியமா இருக்கு”
“இதுலே என்ன ஆச்சரியம்?”
“ரெண்டு பொம்பிளைகள் இருக்கோம். இதுலே யாரு அம்மா, யாரு பொண்ணு?”
“அம்மா, உனக்கு இன்னும் கோபம் தீரவில்லை”
“தெருவிலே போறவங்க மேலே எல்லாம் கோபப்பட நான் ஒண்ணும் பைத்தியக்காரி இல்லை”
“சரி… என் மேலே என்ன கோபம்… அதைச் சொல்லேன்”
“ஏய்…யாருடீ நீ? கண்டவங்க மேலே எனக்கென்ன கோபம்? உனக்கென்ன வேணும்?”
♥“எனக்கென்னம்மா வேணும்? பெத்த தாய் கிட்டே பொண்ணுக்கு என்ன வேணும்? காசா பணமா? பிரியமா ரெண்டு வார்த்தை”
“வெளியே போடி”
“என்னம்மா, பாலச்சந்தர் படத்து வசனம் பேசறே? பொண்ணுக்குத் தகப்பன்கிற முறையிலே மூணு வார்த்தை நானும் கேட்டிருக்கேன்”
“உங்கப்பன்தானேடி அனுப்பினான்? என்ன, சமாதானத்துக்குப் புறா அனுப்பறானா?”
“சட்டப்பூர்வமா சர்வமும் ஆனப்புறம் சமாதானப்புறாவை அனுப்பறதிலே என்ன பிரயோஜனம் அம்மா?”
♥“பின்னே, அப்பா மேலே ஒரு தப்பும் கிடையாது. அவர் ஒரு ஏக பத்தினி விரதன். உன்னையே நினைச்சி கண்ணீர் விட்டுகிட்டு இருக்காரு… எட்செட்ரா ன்னு சொல்ல வந்தியா?”
“அப்படியெல்லாம் எதுவும் இல்லேம்மா. ஒரு மனைவியோட எதிர்பார்ப்புகளுக்கு முரணா அவர் நடந்துகிட்டது நிஜமாக் கூட இருக்கலாம்”
♥“பின்னே எதுக்குதாண்டி இங்கே வந்தே?”
“ஏம்மா, ஒரு பொண்ணு அம்மாவைப் பார்க்க வர்றதுக்கு காரணம் அவசியமா? வந்ததிலேர்ந்து அதையே கேட்கிறே? சரி, நான் கிளம்பறேன்.”
“ஏண்டி, இத்தனை வசனம் பேசறயே… அன்னைக்கு கோர்ட்டிலே அம்மாவோட போறயா, அப்பாவோட போறயான்னு கேட்டப்போ என் தலையிலே நெருப்பள்ளி போட்ட மாதிரி அப்பான்னுட்டு போனே?”
“அதிலே என்னம்மா தப்பு?”
“ஏண்டீ, அந்தாள் பண்ணது தப்புன்னு தெரியுது. பின்னே ஏண்டீ அவர்தான் வேணும்ன்னு போனே?”
♥“அம்மா, ஒரு கணவனா அவர் உனக்கு திருப்தியில்லாம நடந்துகிட்டார். அவர் எனக்கு கணவர் இல்லைன்னு சட்டப்பூர்வமா தீர்ப்பு வாங்கிட்டே. ஒரு அப்பாவா அவர் மேலே எனக்கு எந்த அதிருப்தியும் இல்லே. அப்பாவை ரத்து பண்ண எந்த சட்டமும் இல்லையே”
0 Comments
Thank you