அப்பாவுக்கு மகள் எழுதும் மனம் கவர்ந்த கவிதை:
நான் முதன் முதலாக நேசித்த என் காதலன் நீ..
எப்பொழுது நேசிக்க தொடங்கினேன் என்ற கேள்வியை மட்டும் கேட்காதே அப்பா..💚
அம்மாவின் அடிவயிற்றில் கைவைத்து என்னுடன் பேசினேயே!! அப்பொழுதே நிகழ்ந்து இருக்கக்கூடும்...
இல்லையேல்...கொடி கூட அவிழாத நிலையில் உன் கையில் ஏந்தி உச்சிநுகர்ந்து முத்தம் பதித்தாயே!! அப்பொழுது நிகழ்ந்து இருக்கக்கூடும்...
ஆயிரம் ஆயிரம் கதைகளை சொல்லி அன்னை உறங்க வைத்த பொழுதிலும் உன் மார்பில் தூங்கிய சுகம் வருமா??!!
கண் எரியாமல் நீராட செய்வதும் ஒரு கலையாகும்
அதில் தாயை விட நீ தேர்வு பெற்றதாலோ என்னவோ..??
உன்னை மட்டுமே தேடி அழுதேன் குளிக்கும் வேளையில்..
நடைபழகும் வேலையை விடுத்து என் பாதங்கள் தரையில் ஊன்றியதாய் நினைவில்லை..உன் தோள் மீது அமர்ந்து என் கொலுசோடு
உரசிய உன் சட்டை பொத்தான்கள் மட்டுமே நியாபகம்..
சின்ன சின்ன மணிகளை வைத்து தைத்த பாவாடை சட்டை அணிந்த பொழுது "தேவதையே எனக்கு மகளாக பிறந்துவிட்டாள்!!"என்று கொண்டாடினாயே அதுவும் நினைவிருக்கிறது அப்பா...
உலையில் கொதித்திட அரிசி இல்லை என்ற பொழுதிலும் நான் கேட்டேன் என்பதற்காக
இனிப்புகளை வாங்கி தந்து தாயாரின் வெறுப்பை சம்பரித்துக் கொள்வாயே!!
அது ஏன் அப்பா??
மிரட்டலாக என்னை வகுப்பறையில் அமர்த்திவிட்டு கலகத்துடன் வெளியேறும் உன்னை யான் அறியாமல் யார் அறிவார்??
தாவணியின் நுனியினை பிசைந்தார் வண்ணம் உன் முன் நானி நான் நிற்க..
உன்னை விட்டு விலகிச்செல்ல வெகு நாட்கள் இல்லை என்று நினைத்தாய் போலும்!!
கண்களில் துளிர்த்த நீரை யவருக்கும் தெரியாமல் துடைத்துக்கொண்டாய்..
பலவாறாக தம்மிடம் நான் வாதாடினாலும் உன் ஒரு சொல்லுக்கு கட்டு படாமல் நான் இருந்ததில்லை அப்பா..
நான் சமைத்த உணவை நா கூசாமல் புகழ்ந்து தள்ளுவாயே...!! உன் பொய்யிற்க்கும் ஒரு காதல் உண்டு அப்பா...
என் விழி அசைவினில் என் தேவைகளை பூர்த்தி செய்யும் உன்னை தெய்வத்திற்கு ஈடாக பார்க்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன்...
பக்தி இருந்தால் ஒழிய கிடைக்கும் தெய்வத்தின் வரம்..
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை காக்கும் நீயே ஒரு வரம் அல்லவா??
மலையளவு துன்பத்தை கூட திணையளவும் பொருட்படுத்தாத நீ..
என் கண்களில் நீரை கண்டால் உடைந்துப் போவது ஏனோ??
நான் விரும்பாததை நீ என்னிடம் புகுத்தியதும் இல்லை..
என் விருப்பத்தை நீ வெறுத்ததும் இல்லை...
என் ஒரே ஒரு கவலை என்னை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு கண்ணீர் விடும் உன்னை தேற்ற என்னை அன்றி எவருக்கு தெரியும் என்பதே??!!
என் கணவனை எந்நாளும் உன்னுடன் ஒப்பிட மாட்டேன்..
எனக்கு நன்றாகவே தெரியும் என்னை முழுதாக நேசிக்கும் ஒரே ஒரு ஆடவன் நீ மட்டும் தான் என்று...
இனி ஒரு ஜென்மம் வேண்டும் என்று எண்ணியதில்லை..
ஆனால் அவ்வாறு நிகழ்ந்தால் மறுபடி உன் மகளாக பிறக்கும் வரம் மட்டும் போதும் அப்பா....
மகளை பெற்ற மகாதேவர்களுக்கு சமர்ப்பணம்.
0 Comments
Thank you