♥என் தோழிக்கு கடந்த மாதம்தான் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது முதுகிலும், மார்பகக் காம்பிலும் வலிப்பதாக கூறுகிறாள். ஏன் இப்படி ஆகிறது? -
♥“இந்தக் காலத்து இளம் தாய்மார்களுக்கு எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதே தெரியவில்லை. தலைமுறைகளுக்கு முன்பு வரை நம் பிரசவம், மருத்துவ மனைகளில் நடப்பது அரிதாக இருந்தது. நம்முடைய பெற்றோரெல்லாம் பெரும்பாலும் வீட்டில் பிறந்தவர்கள்தான். தாயையும், சேயையும் கவனிக்க குழந்தை பெறுவதில் அனுபவமிக்க பெரியவர்கள் இருந்தார்கள்.
♥குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதில் தொடங்கி, குழந்தை வளர்ப்பின் அத்தனை டிப்ஸ்களையும் கில்லியாகக் கொடுத்தார்கள் அவர்கள். காலம் மாறிவிட்டது. இப்போது மருத்துவமனைகளில்தான் பிரசவம் நடக்கிறது. அதிலும் பெரும்பாலும் சிசேரியன் கேஸ்தான். மனைவிக்கு பிரசவம் பார்க்க இளம் கணவன்தான் கூட வருகிறான். பெரியவர்கள் யாரும் இல்லையா என்று கேட்டால், அவர்கள் ஊரில் இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள்.
♥அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற அந்த இளம் தாய்க்கு குழந்தையை எப்படி தூக்குவது, எப்படி பால் கொடுப்பது என்றுகூட தெரியவில்லை. மருத்துவமனையில் இருக்கும் வரையில் மருத்துவர்களும், செவிலியர்களும் சொல்லிக் கொடுக்கிறார்கள். வீட்டுக்கு அழைத்துச் சென்றபிறகு இவர்கள் கடுமையாக திணறுகிறார்கள். உங்கள் தோழிக்கு ஏற்பட்ட பிரச்சினை சகஜம்தான். இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இளம் தாய்மார்கள் பலரும், இதை வெளியே சொல்லக்கூட கூச்சப்பட்டுக் கொண்டு தாய்ப்பால் தருவதையே நிறுத்திவிடும் விபரீத முடிவுக்கெல்லாம் வருகிறார்கள்.
♥பிரசவத்துக்கு பின் தாயிடம் சுரக்கும் பாலில்தான் குழந்தையின் ஒட்டுமொத்த வாழ்வுக்கான முதல் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. குழந்தையின் செரிமான சக்தியை வளரச் செய்யவும் தாய்ப்பால்தான் உதவுகிறது. பிறந்த குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்கும் தாயின் ஸ்பரிசத்தால் அவர்களுக்கு இடையே ஒரு ெநருக்கமான பந்தம் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பது எவ்வளவு அவசியமோ அதே போலத் தான் குழந்தையை சரியான நிலையில் தூக்கிப் பிடிப்பதும் அவசியம். மடியில் தலையணையை வைத்துக் கொண்டு குழந்தையை கையில் ஏந்த வேண்டும்.
♥குழந்தையின் வயிறும் தாயின் வயிறும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கும் படி குழந்தையை படுக்க வைக்க வேண்டும். அதாவது குழந்தை ஒரு கையில் படுத்துக் கொண்டு தாய்ப்பாலை பருகும் படி செய்ய வேண்டும். அப்போது தான் குழந்தைக்கு கழுத்து வலியும், தாய்க்கு முதுகு மற்றும் மார்பகக் காம்பிலும் பிரச்னைகள் ஏற்படாது. சரியான நிலையில் குழந்தையை கிடத்தாமல், குழந்தை பால் குடிக்கவில்லை என்று புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை. குழந்தை மார்பகக் காம்பை சப்பினால் மட்டுமே பால் சுரக்காது.
♥மார்பகக் காம்பினைச் சுற்றி உள்ள பகுதியைப் பிடித்து குடிக்கும் போது தான் பால் சுரக்கும். சில குழந்தைகள் வாயை நன்கு திறந்து குடிக்க கஷ்டப்படும். அந்தச் சமயத்தில் நம்முடைய சுண்டு விரலை அவர்கள் வாயினுள் செலுத்தி வாயை நன்கு திறக்க வைத்து பின்பு குடிக்க வைக்க வேண்டும். பல தாய்மார்களுக்கு பால் சுரக்கவில்லை என்பது தலையாயப் பிரச்னையாக உள்ளது. பொதுவாக குழந்தை வாய் வைத்து சப்பி குடிக்க குடிக்க தான் தாய்ப்பால் சுரக்கும்.
♥இப்போது பல தாய்மார்கள் வேலைக்கு செல்வதால், குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் இருந்தே பாக்கெட் பால் கொடுத்து பழக்கி விடுகிறார்கள். அப்படி செய்யாமல் வேலைக்கு செல்வதற்கு முன் கிண்ணத்தில் தாய்ப்பாலை எடுத்து நன்றாக மூடி ஃப்ரிட்ஜில் வைத்து குழந்தைக்கு பசி எடுக்கும் போது கொடுக்கலாம். தாய்ப்பாலை சேகரிக்க பிரஸ்ட் பம்ப் கருவி எல்லாம் சூப்பர் மார்கெட்டில் கிடைக்கிறது. இதை மார்பகத்தில் வைத்து பம்ப் செய்தால் பால் தானாக அதில் உள்ள பாத்திரத்தில் விழும்.
♥ஃப்ரிட்ஜ் ப்ரீஸரில் வைத்தால் இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இருப்பினும் அப்படி சேமித்து வைக்கும் தாய்ப்பாலை சூடு செய்த பிறகே குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். தாய்ப்பாலை நேரடியாக அடுப்பில் வைத்து காய்ச்சக் கூடாது. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பில் இருந்து தண்ணீர்ப் பாத்திரத்தை இறக்கி தாய்ப்பால் இருக்கும் கிண்ணத்தை இதில் வைத்து சூடாக்க வேண்டும். அதன் பின்னரே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
♥குறைந்தபட்சம் ஆறு மாதம் வரைக்குமாவது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இதற்கிடையில் வேறு பால் எதையும் கொடுக்க வேண்டாம். ஒரு வயதிற்கு பிறகு பாக்கெட் பாலை காய்ச்சிக் கொடுக்கும்போது அதில் சர்க்கரை சேர்க்காமல் கொடுத்துப் பழகுவது நல்லது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், புத்திக் கூர்மையாகவும் இருப்பார்கள்’’ என்று தாய்ப்பாலின் மகத்துவத்தையும், இளம் தாய்மார்களுக்கு இதில் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகளுக்கான தீர்வையும் கூறுகிறார் டாக்டர் பத்மினி.
♥தாய்ப்பால்: FAQs
#கேள்வி: தாய் எடுத்துக் கொள்கிற உணவுகளின் கலப்பு தாய்ப்பால் வழியே குழந்தைக்குச் செல்லுமா? உதாரணத்துக்கு தாய் மாம்பழம் சாப்பிட்டால், குழந்தைக்கு மாந்தம் ஏற்படும் என்பதெல்லாம் உண்மையா?
#பதில்: இல்லை. தாய் என்ன சாப்பிட்டாலும் அதன் சத்துகள் மட்டுமே குழந்தைக்கு பாலின் வழியே போகும். தாய் எடுத்துக் கொள்கிற உணவினால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படவெல்லாம் வாய்ப்பில்லை. ஆனால், தாய் எடுத்துக் கொள்கிற மருந்துகள், ஆன்ட்டிபயாடிக் உள்பட, அதன் வீரியம் தாய்ப்பாலின் வழியே குழந்தைக்கும் போகும். தேவையின்றி எடுத்துக் கொள்கிற ஆன்ட்டி
பயாடிக்கின் விளைவால் குழந்தைக்குத் தொற்று ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.
♥#கேள்வி.: அம்மாவுக்கு உடல்நலமில்லாத போது தாய்ப்பால் ஊட்டக்கூடாதா?
பதில்: காய்ச்சல் இருந்தால்கூட தாய்ப்பால் கொடுக்கலாம்.
♥கேள்வி: மார்பகங்களின் அளவுக்கும் தாய்ப்பால் சுரப்புக்கும் தொடர்புண்டா?
பதில்: மார்பகங்களின் அளவு என்பது அந்தப் பகுதியில் உள்ள கொழுப்பால் தீர்மானிக்கப்படுவது. தாய்ப்பால் சுரப்பு என்பது பால் சுரப்பிகளின் வேலையால் நிகழ்வது. கொழுப்புக்கும் பால் சுரப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, மார்பகங்களின் அளவு குறித்த கவலை தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்குத் தேவையே இல்லை.
♥கேள்வி: நீண்டகாலம் தாய்ப்பால் கொடுப்பது சரியா, தவறா?
பதில்: அதனால் தாய்க்கு சத்துக்குறைபாடு ஏற்பட்டு, பலவீனமாகலாம். மற்றபடி குழந்தைக்குப் பிரச்னைகள் இல்லை. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தாய்ப்பாலை மட்டுமே தொடராமல், திட உணவுகளையும் பழக்குவதுதான் குழந்தையின் முழுமையான ஆரோக்கியத்துக்கு உதவும்.
0 Comments
Thank you