#ஆலமரம்!
♥விழாக்கோலம் பூண்டிருந்தது, சிவதாணுவின் வீடு. 'தாத்தா...' என, ஓடி வந்த பேரன் ராம், சிவதாணுவின் மடியில் ஏறி உட்கார்ந்தான்.
''ராம்... மெதுவாக ஓடி வரணும்; இப்பப் பாரு மூச்சு வாங்குதில்ல... சரி, எதுக்கு இப்ப ஓடி வந்தே?'' என்று கேட்டார், சிவதாணு.
''வெளிநாட்டுலருந்து, சித்தப்பா இன்னைக்கு வர்றாராமே...''
''ஆமா... உனக்கு எப்படி தெரியும்...''
''பாட்டி சொன்னாங்க... சித்தப்பா வெளிநாட்டுலருந்து எனக்கு பொம்மை, சாக்லேட் எல்லாம் வாங்கி வருவாராம்; உங்களுக்கு எதுவுமே வாங்கி வரமாட்டாராம்,'' என்றான்.
♥''ஏன் எனக்கு வாங்கி வரமாட்டானாம் உன் சித்தப்பா?''
''நீங்க தான் சித்தப்பாவ திட்டி, அடிச்சு, வீட்டை விட்டே விரட்டினீங்களாம்...'' என்றான்.
''அப்படிக் கேளுடா என் பேராண்டி... இனிமேலாவது உங்க தாத்தனுக்கு உரைக்கட்டும். என் செல்லப் பிள்ளை கணேசனை காண பொறுக்காது உன் தாத்தனுக்கு! அவன கரிச்சுக் கொட்டி, ஊரை விட்டே, நாட்டை விட்டே விரட்டிட்டாரு பாவி மனுஷன்... எங்களுக்குதான் இதைக் கேட்க துப்பில்ல; நீயாவது கேள்...'' என்றாள், சிவதாணுவின் மனைவி பார்வதி.
''அவன்தான் குழந்தை... புரியாம கேட்குறான்; நீயுமா என்னை புரிஞ்சுக்கல...'' என்றவர், ''கண்டிப்பா கணேசன் என்னைப் புரிஞ்சுக்குவான்; நீ போயி வேலையப் பாரு... என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடு,'' என்றார்.
♥''நான் பேசினா அப்படித்தான் இருக்கும்... கேக்குறவங்க கேட்டா பதில் சொல்லித்தானே ஆகணும்... அதான் வர்றான்ல வெளி நாட்டுலருந்து... வந்து கேட்பான்; அப்ப எப்படி பதில் சொல்றீங்கன்னு பாக்கிறேன்.
''இந்த வீடு, பெரிய ஆல மரம் மாதிரின்னு ஊருக்குள்ள ஒரே பேச்சு... சொந்த பிள்ளைக்கு இந்த வீட்டுல இடமில்ல... யார் யாரோ வர்றாங்க, போறாங்க அவங்களுக்கெல்லாம் நான் வடிச்சு கொட்டிட்டு இருக்கேன். எம் புள்ளைய நாட்ட விட்டே அனுப்பிட்டீங்க... என்னை எங்க விரட்டி விடப் போறீங்களோ...'' என்று புலம்பியபடி, சமையல் அறையை நோக்கி நடந்தாள், பார்வதி.
♥மனைவி பேசியதைக் கேட்டு, 'எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும்...' என்று, கண்ணை மூடி, பெருமூச்சு விட்டார், சிவதாணு. பழைய நினைவுகள் மெல்ல மனதில் எட்டிப் பார்த்தது.
'கணேசா... டிகிரி முடிச்சாச்சு... வேலைக்கு முயற்சி பண்ணுறயா, இல்லயா...'
'வேலை தேடிட்டுதாம்ப்பா இருக்கேன்... ஊரே வந்து இங்க திங்கறாங்க, அதெல்லாம் உங்களுக்கு பெரிசா தெரியல. நான் வீட்டுல இருக்கிறது தான் உங்களுக்கு பெரிசா தெரியுது... நாம எல்லாரும் வீட்டுல உட்கார்ந்து தின்னாலும், இன்னும் ஏழு தலைமுறைக்கு சொத்து இருக்கு... நான் வேலைக்கு போய்தான் சம்பாதிக்கணுமா...' என்றான்.
♥'இது, எங்க அப்பன், பாட்டன் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்து... உட்கார்ந்து அவங்க தின்றிருந்தா, இன்னைக்கு ஒரு பிடி மண்ணு கூட நமக்கு மிஞ்சி இருக்காது... சரிப்பா, உனக்கு வெளிநாட்டில் வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கேன். நீ அங்க போ; இங்க இருந்தா குட்டிச்சுவரா போயிடுவ, இல்லாதவங்களுக்கு சாப்பாடு போடுறதையும், உதவுறதையும் பெரிசாய் பேசுறியே... இனிமேல் நீ இங்க இருந்தால், என் பரம்பரை பேரைக் கெடுத்திடுவே, இன்னும் ஒரு வாரத்துல நீ மலேஷியாவில் இருக்கணும்... போய் கிளம்புற வழியப் பாரு...' என்றார்.
♥'தம்பி இன்னும் கொஞ்ச நாள் இருக்கட்டும்பா... அப்புறம் உங்க இஷ்டப்படி நடந்துக்குவான்...' என்றான், சிவதாணுவின் மூத்த மகன். அவன் மனைவியும் மைத்துனனுக்கு சிபாரிசு செய்தாள். பார்வதியும் மகனுக்காக எவ்வளவோ பேசிப் பார்த்தாள். யாருடைய பேச்சுக்கும், செவி சாய்க்கவில்லை சிவதாணு.
நான்கு நாட்களில் வெளிநாடு செல்ல ஆயத்தமானான், கணேசன். அம்மா, அண்ணி, அண்ணன் மற்றும் உறவினரிடம் விடைபெற்றவன், தந்தையிடம் மட்டும் முகம் கொடுத்து பேசவுமில்லை; சொல்லிக் கொள்ளவும் இல்லை. மலேஷியாவிற்கு சென்று விட்டான்.
♥''எதுக்கு தாத்தா... எல்லாரும் நம்ம வீட்ட ஆலமரம்ன்னு சொல்றாங்க, நம்ம வீடு பெரிசா இருக்கிறதாலயா...'' என்று கேட்டான், பேரன் ராமு.
''இல்லடா கண்ணு... நம்ம மனசு பெரிசா இருக்கிறதால அப்படி சொல்றாங்க. பசிக்குதுன்னும், உதவின்னும் கேட்டு வர்றவங்களுக்கு இல்லன்னு சொல்லாம, நம்மளால முடிஞ்ச சிறு உதவிய செய்றோம். நீயும், யாருக்கும் எதையும் இல்லன்னு சொல்லக்கூடாது. உன்னிடம் இருந்தால் அனைத்தையும் கொடுக்காட்டாலும், உன்னால் முடிந்ததை கொடு; தர்மம் தலை காக்கும்,'' என்றார்.
♥''அப்புறம் எதுக்கு தாத்தா சித்தப்பாவ வெளிநாட்டுக்கு அனுப்புனீங்க, இங்கே இருக்க வச்சிருக்கலாம்ல...''
''கண்ணு... ஆலமரத்தை தேடி பல உயிரினம் வருது, சாப்பிடுது, தங்குது, போகுது. ஆலமரத்தின் குணம், அனைவருக்கும் கொடுப்பது, பாதுகாப்பது... அதுபோல, நம்ம கிட்ட இருப்பதில், சிறிதளவாவது மத்தவங்களுக்கு கொடுக்கணும்,'' என்றார்.
♥''தாத்தா, கொடுத்துக்கிட்டே இருந்தா, ஆலமரமானாலும் செத்துப் போயிடாதா, தண்ணியுமில்லாம, ஒண்ணுமில்லாம...''
''சரியாச் சொன்னடா என் செல்லம்... நீ சின்னப் பையனாக இருந்தாலும் அதிபுத்திசாலியாக இருக்கிறே... ஆலமரம் சாகக் கூடாதுன்னா, ஆலமரத்தின் ஆணிவேர் மட்டும் நீரை உறிஞ்சி, உணவு சேகரித்தால் போதாது. அதன் கிளை வேர்களும், தனக்கு வேண்டியதை சேகரிக்கணும். அப்போது தான் ஆலமரம், பல நுாறு வருஷம் உயிரோடு இருக்கும்; கிளை வேர்களும் ஆணிவேர் ஊன்றி, பெரிய ஆலமரமாக வளரும். அதுவும் நாலு பேருக்கு நல்லது செய்யும் மரமாக வளரும்.
♥''அதனால் தான் பரம்பரை சொத்தை காப்பாற்றணும்ன்னா, அதுக்கு தன் தகுதியை வளர்த்துக்கணும். தான் ஒரு துணை வேராக இருந்தாலும், ஆணி வேராக மாற கடுமையாக உழைக்கணும். அந்தப் பயிற்சிக்காகதான், உன் சித்தப்பாவ வெளிநாட்டிற்கு அனுப்பினேன். என்ன... இப்போ புரியுதா... நீயும் பெரிய பையனானதும் படிச்சு, வெளியில் வேலை பார்த்து, அனுபவ அறிவை கத்துக்கணும்.
''யார் யாரோ வர்றாங்க, தங்குறாங்க, சாப்பிடுறாங்கன்னா... அவங்க ஒரு வேளையோ, இருவேளையோ சாப்பிடுவாங்க; தங்குவாங்க, பின், கிளம்பி போயிடுவாங்க. உன் சித்தப்பா அப்படியா... அவன் யாரிடமும் உட்கார்ந்து சாப்பிட பிறந்தவனல்ல; அடுத்தவர்களுக்கு சாப்பாடு கொடுக்கப் பிறந்தவன். நன்றாக உழைக்க தெரிந்தவன்; தனக்கென வாழாமல், பிறருக்காக வாழும் பண்பை வளர்த்துக்கணும்.
♥''உன் சித்தப்பனுடைய திறமைய அவனுடைய குழந்தைப் பருவத்திலேயே அறிவேன்... உன்னைப் போன்று துறுதுறுவென்று கேள்வி மேல் கேள்வி கேட்டுட்டு இருப்பான். இது, ஒரு வயது; எது சரி, எது தவறுன்னு தெரியாமல் திண்டாட வைச்சுடும். கொஞ்சம் தடம் மாறினாலும், வாழ்க்கை தொலைஞ்சு போயிடும்.
''அதனால் தான், அவனை திட்டி, வெளிநாட்டிற்கு அனுப்பினேன். இது, இத்தனை வருஷம் என்னுடன் குடும்பம் நடத்தின உன் பாட்டிக்கே புரியல. உன் சித்தப்பனுக்கு எங்க புரியப் போகுது... இப்ப, நம்ம குடும்பத்துக்கே நான் எதிரியாகிட்டேன்.
♥ஏதோ என் மனக்குமுறல்களை உன்னிடம் சொல்லிட்டேன். குழந்தையும், தெய்வமும் ஒன்னுங்கிற மாதிரி, உன்னிடம் சொன்னது, தெய்வத்திடமே சொல்லிவிட்ட மாதிரி மனசுக்கு அமைதியாயிருக்கு,'' என்றார்.
''என்னை மன்னிச்சிடுங்கப்பா...'' என்று சிவதாணுவின் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்தான், கணேசன். ''அப்பா, உங்கள புரிஞ்சுக்காம உங்க கிட்ட பேசாம இருந்துட்டேன். நீங்க, என்னை வெளிநாட்டிற்கு அனுப்பி இருக்கலன்னா, எனக்கு எந்த விவரமும் தெரிந்திருக்காது; என் வாழ்க்கையும் சீரழிஞ்சு போயிருக்கும். நான் பெரிய பணக்காரன் என்ற மமதையிலே, என் அறிவை இழந்திருப்பேன். கண்டிப்பா, நம் பரம்பரை பேரை காப்பாற்றுவேன்; வறியவர்களுக்கு இல்லன்னு சொல்லாமல், இருப்பதை வைத்து சிறப்பாக செய்வேன். என் உடலில் உயிர் இருக்கும் வரை, என் உழைப்பு ஓயாது. நீங்க ராம்கிட்ட பேசிக்கிட்டிருந்தத நாங்க எல்லாருமே கேட்டோம்,'' என்றான்.
♥''கணேசா எந்திரிய்யா... என் மகன், எப்படி வரணும்ன்னு நினைச்சேனோ, அப்படியே வந்திருக்கே. இதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு என்ன இருக்கு... உன்னை பிரிந்திருந்த நாட்களில் என் ரத்தமே உறைந்து கிடந்துச்சு. இன்று தான் உயிர் பெற்றது போல இருக்கு,'' என்று மகனை கட்டித் தழுவினார், சிவதாணு.
♥''என்னங்க, என்னையும் மன்னிச்சிடுங்க; பிள்ளைப் பாசத்துல கண்டபடி ஏதேதோ பேசிட்டேன்,'' என்றாள், மனைவி.
''பார்வதி... என்ன, இது சின்னப் பிள்ளையாட்டம்... ஐஞ்சு வருஷம் கழிச்சு வந்திருக்கான், நம்ம மகன். சாப்பாட போடு; எல்லாரும் சேந்து சந்தோஷமாக சாப்பிடுவோம்; இன்னைக்கு எனக்கு ரொம்ப பசிக்குது,'' என்றார் சிவதாணு.
''டேய் குட்டிப் பையா... உம் பேரு தான் ராமா... நீங்கதான் இந்த வீட்டுக்கு பெரிய மனுஷனா... உங்ககிட்ட தான் எங்கப்பா எல்லாத்தையும் சொல்வாரோ... நீ சித்தப்பா மாதிரி சமத்தா இருக்கணும்,'' என்றவன், ''இந்தா... இதெல்லாம் உனக்குத் தான்,'' என்று தான் வாங்கி வந்த சாக்லெட் மற்றும் விளையாட்டுப் பொருட்களை கொடுத்தான்.
♥பின், எல்லாருக்கும் வாங்கி வந்த பொருட்களை கொடுக்க, வீடே சந்தோஷத்தில் திளைத்தது.
''பார்வதி... சாமிய கும்பிட்டு, நம்ம புதிய நுாற்பாலை சாவிய, கணேசன் கிட்ட கொடு; இனி, அவன் வெளிநாடெல்லாம் போக வேணாம்; நுாற்பாலைய கவனிச்சுக்கட்டும்,'' என்றார் சிவதாணு.
அப்பா, அம்மா இருவர் காலிலும் விழுந்து வணங்கி, சாவியை பெற்றுக் கொண்டான், கணேசன்.
அவன் கற்ற கல்வியும், அனுபவ அறிவையும் கொண்டு அந்த நுாற்பாலையை, நம்பர் ஒன் ஆக கொண்டு வந்தான். ஏழை, எளியோருக்கு உதவிகள் பல செய்தான். காலப்போக்கில், பல கிளை வேர்கள் விட்டு, பெரிய ஆல மரமாக தழைத்தோங்கியது, அந்நிறுவனம்!
♥விஜயா உதயகுமார்
வயது: 45.
படிப்பு: டி.டி.சி., (அர்ஹாடிக் யோகி)
சொந்த ஊர்: உசிலம்பட்டி, தற்சமயம் வசிக்கும் ஊர்: அருப்புக்கோட்டை. கவிதைகள் வாசிப்பது மற்றும் எழுதுவது இவருக்கு மிகவும் பிடித்தமானது
0 Comments
Thank you