HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கதவைத் தட்டும் ஆவி!

♥கதவைத் தட்டும் ஆவி!

♥நட்ட நடு ஜாமம் என்று சொல்லப்படும் நள்ளிரவு. ஊர் அடங்கிப் போயிருந்தது. வெகு தூரத்தில், நாய் ஒன்று ஊளையிடும் சப்தம் கேட்டுக் கொண்டிருக்க, இருளின் பேரமைதியே, ஒரு வித ரீங்காரத்தை எழுப்பி, எல்லாத் திசைகளிலும் பரவ விட்டுக் கொண்டிருந்தது. நள்ளிரவு 12:00 மணி என்பது, கேட்கும் மாத்திரத்திலேயே, பயம் தரும் நேரமாகத்தான் பட்டது ராஜிக்கு. ஐயனார், தீவட்டி சுமந்து, காவலுக்கு போகிற நேரம் என, கிராமத்தில் இருக்கும்போது... ஒருமுறை அம்மா சொன்னது ஞாபகம் வந்தது.

♥முகம் முழுக்க வியர்த்துப் போய், தூங்கிக் கொண்டிருந்த கணவனின் தோள்களை பிடித்து உலுக்கி எழுப்பினாள் ராஜி.
பதறிப்போய் எழுந்தான் அஜய். நல்ல தூக்கத்தில் எழுப்பி விட்டாளே, என்ற கோபத்தின் கலவரம் அவனிடம்.
""என்னங்க... அங்க பாருங்க, நான் சொன்னேன்ல... நம்ம அடுக்களை கதவு படபடன்னு ஆடுது பாருங்க,'' அவள் கதவு நோக்கி சுட்டிக்காட்டியபடி, அவன் தோள்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள். பயத்தில், அவள் முகம் வியர்த்திருந்தது. கொஞ்ச நேரம்... அந்தக் கதவுகளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான் அஜய். பத்து நாட்களாக ராஜி, அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாலும், அஜய் அதை நம்பவில்லை."உனக்கு ஏதோ பிரமைடா செல்லம், தேவையில்லாம பயப்படற...' என்று ஆறுதல் கூறினான்.

♥ஆனால், இன்று... அடுக்களை கதவு மட்டும் படபடவென்று ஆடுவதை கண்கொட்டாமல் பார்த்த போது, அரண்டுதான் போனான் அஜய். கிட்டத்தட்ட பத்து நிமிடம்... யாரோ பின்னால் நின்று உலுக்குவதைப்போல ஆடிக் கொண்டிருந்தது கதவு. அஜய், பேய் பிசாசுகளுக்கு பயப்படுபவன் இல்லையென்றாலும், மனசுக்குள், "திக்'கென்றிருந்து, வியர்த்து கொட்டியது. யாரும் இல்லாமல் கதவு ஆடுவது எப்படி?

♥கையில் டார்ச் லைட்டை எடுத்து, அந்தக் கதவுகளை நோக்கி நடந்தான் அவன். ராஜி, ஆஞ்சநேயர் ஸ்லோகத்தை சப்தமாக கூறிக் கொண்டே வந்தாள். கதவுகளின் மேல், "லைட்' டை அடித்துப் பார்த்தான். அது சலனமில்லாமல் நின்று கொண்டிருந்தது; பிறகு மெல்ல... கதவின் மீது கை வைத்தான், அது எதிர்பாராவிதமாக திறந்து கொண்டது. சடாரென்று கைகளை இழுத்து, ஒரு அடி பின்னால் வந்தான் அஜய். எலியை குறி வைத்து உட்கார்ந்திருந்த பூனை, சரேலென பாத்திரங்களின் மீது குதித்து, உருட்டியது, "வீல்...' எனக் கத்தியபடி.

♥அஜய் மீது ஒட்டிக் கொண்டாள் ராஜி. ஏதோ நிழல் ஒன்று, கதவுகளுக்குப் பின்னால்... மறைவதைப் பார்த்ததாகச் சொன்னாள் ராஜி. அவனையும் மீறி, அவனுக்குள் கலந்தது பயம். அவனுக்கு படபடவென்று வந்தது. கொஞ்ச நேரம் அமைதியாக யோசித்தான் அஜய்.
ஆஞ்சநேயர் ஸ்லோகம் சொல்லிக் கொண்டேயிருந்தாள் ராஜி.

♥அடுக்களைக்குள் சென்று பார்த்தான், எதுவுமே இல்லை. ஒருவேளை காற்றுக்கு ஆடியிருக்குமோ... என்று தோன்றியது. ஜன்னல்களை திறந்து பார்த்தால், ஜன்னலுக்கு வெளியே மரங்கள் அசைவற்று நின்று கொண்டிருந்தன. காற்றுக்கு ஆடினால், எல்லாக் கதவுகளுமே ஆட வேண்டும். ஆனால், இங்கே அடுக்களை கதவுகள் மட்டும் ஆடுவது வியப்பாக இருந்தது, அஜய்க்கு. இதில், மர்மம் இருக்க வேண்டும் என்று தோன்றியது. தூரத்தில் குரைத்துக் கொண்டிருந்த நாயின் சப்தம், இப்போது நின்று போயிருந்தது.

♥""எனக்கு பயமா இருக்குங்க,'' திரும்பி வந்து படுத்துக் கொண்டே சொன்னாள் ராஜி.
""தேவையில்லாம பயப்படாதடா... இது என்னன்னு, நாம கவனிச்சுப் பார்க்கலாம்...''
ராஜியின் தோள்களைத் தட்டியபடியே ஆறுதல் சொன்னான் அஜய். பயம் போக, அவனை இறுக கட்டிக் கொண்டாள் ராஜி.
இரண்டு மாதங்களுக்கு முன்தான், இந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருந்தான் அஜய். பி.எஸ்.சி., - பி.எட்., - பாட்டனி - டி.ஆர்.பி., எழுதி தேர்ச்சி பெற்று, போஸ்டிங் வாங்கியிருந்தான். கோவையை தாண்டி, கேரளா பார்டரான எட்டிமடையில்தான் முதல் அப்பாயிண்ட்மென்ட் கொடுத்திருந் தனர். கடந்த மூன்றாண்டுகளாக, மேட்டுப் பாளையத்திலிருந்து தினந்தோறும் எட்டிமடை போய் வருவதற்குள், படாதபாடு படுவான் அஜய்.

♥"குருதிசை முடிவதற்குள், திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், 40 வயசுக்கு மேல்தான் திருமணம் நடக்கும்...' என்று, ஜோசியர் மிரட்டி இருந்ததால்... அவசர அவசரமாக, ஒன்று விட்ட மாமன் மகளையே திருமணம் செய்து கொண்டான். ராஜியும் டீச்சர் தான். செகண்டரி கிரேட் டீச்சர்.

♥இரண்டு பேரும் ஒரே இடத்தில் வேலை பார்த்தால், வசதியாக இருக்கும் என்று நினைத்துத்தான், கவுன்சிலிங் வந்தபோது, இரண்டு பேரும் ஒரே இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கியிருந்தனர். லட்சிய ஆசிரியர்களாகப் பணிபுரிய வேண்டும் என்று ஆசைப்பட்டதால், இரண்டு பேருக்குமே, இந்த கிராமம் பிடித்திருந்தது. இந்த கிராமத்தில் வசிப்பவர்களில், முக்கால்வாசிப்பேர் கல் உடைப்போர். போத்தம்பாளையத்தைச் சுற்றிலும் கல் குவாரிதான். இங்குள்ள மக்கள் இரவு, பகல் பார்க்காமல் வேலைக்குப் போவதைப் பார்த்து, ஊருக்கு வந்த புதிதில் ஆச்சரியப்பட்டிருக்கிறான் அஜய்.

♥அவர்கள், தங்கள் குழந்தைகளைக்கூட, பள்ளிக்கு அனுப்பாமல், கல் குவாரியில் வேலைக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். "இந்த ஊர் மக்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து... இவர்களை நல்ல நிலைக்கு உயர்த்துவது தான், நம் வேலைக்கு அழகு...' என நினைத்து உடனடியாக... இங்கு பணியில் சேர்ந்து கொண்டனர் அஜய்யும், ராஜியும். புரோக்கர், இந்த வீட்டைக் காட்டியபோதே கொஞ்சம் தயங்கினான் அஜய். வீடு மலைப்பகுதியை ஒட்டி தனியாக இருந்தது. வீடுகள் அருகருகே இல்லாமல், மூலைக்கு ஒன்றாக இருந்தன. "ஒரு ஆத்திர அவசரம் என்றால், யாரைக் கூப்பிட்டு உதவி கேட்பது...' என்று யோசித்தான் அஜய்.
"நீங்க என்ன தம்பி, பழைய காலம் மாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க... இன்னைக்கு எல்லாருடைய பாக்கெட்லயும் பணம் இருக்கோ, இல்லையோ, செல்போன் இருக்கு, நம்பரைத் தட்டுனா யாரை வேணா, எப்ப வேணா கூப்டுக்கலாம்.

♥3 கி.மீ., மேற்க போனா டாக்டர் வீடு, இன்னும் 2 கி.மீ., தள்ளிப் போனா வெள்ளக்கோவில் டவுன்... இத்தனைக்கும் உங்கக்கிட்ட கார் இருக்கு, எல்லாம் கம்ப்யூட்டர் காலமா போச்சு தம்பி... இந்தக் காலத்து புள்ள நீங்க, இப்படி யோசிக்கறீங்க...' என்றார் புரோக்கர்.
மூச்சு விடாமல் பேசிய புரோக்கரின் வார்த்தையை நம்பித்தான், இந்த வீட்டிற்கு குடிவர ஒத்துக் கொண்டான் அஜய்.
புரோக்கர் சொன்னது போலவே, வீடு வசதியாக இருந்தது. கிச்சன், பாத்ரூம், தண்ணீர் வசதி என்று, எந்தக் குறையும் இல்லை. மாலை நேரம் மொட்டை மாடிக்குப் போனால், மலைக்காற்றின் சுகம். எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.

♥ஆனால்... இப்படியாகிவிட்டதே என்ற கவலையில், அன்று இரவு முழுவதும் தூக்கம் பிடிக்காமல் படுத்திருந்தான் அஜய்.
காலையில் கீரைக்காரி வந்தவுடன், முதல் வேலையாக, கதவு தானாக தடதடவென ஆடுகிற கதையை, வரிவிடாமல் கொட்டி முடித்தாள் ராஜி. அவளிடம் இன்னும் படபடப்பு ஓயவில்லை. முகம் வாடிப் போயிருந்தது.
""நான் நெனச்சேன் டீச்சரம்மா... அப்படித்தான் நடத்திருக்கு,'' கீரைக்காரி கூடையை வாசல் படிக்கட்டில் இறக்கி வைத்துவிட்டு, வசதியாக உட்கார்ந்து கொண்டு, புதிர் போட்டாள்.
""என்னம்மா சொல்றீங்க?'' கீரைக்காரியை அதிர்ச்சியுடன் கேட்டாள் ராஜி.

♥""இந்த வீட்ல, ரெண்டு வருஷத்துக்கு முன் குடியிருந்த பட்டாளத்துக்காரர் ஒருத்தர், ரயில்ல அடிபட்டு செத்துப்போயிட்டாரு... வீட்டுல வீட்டுக்காரம்மா மட்டும்தான். புள்ள குட்டின்னு யாரும் இல்ல. வீட்ல தனியா இருந்த அந்தம்மா, இந்த ரூமுக்குள்ளதான் தூக்கு மாட்டி செத்துப் போச்சு.''
முகம் வெளிறிப்போய் கேட்டுக் கொண்டிருந்தாள் ராஜி. அவள் வாங்கி வைத்திருந்த கீரைக்கட்டு, அவள் கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது.
அப்படியே சுவரில் தலை சாய்த்து உட்கார்ந்து கொண்டாள்.

♥""கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும், செத்துப்போன ரெண்டு பேருமே... இந்த ஊர்ல ஆவியா சுத்துறதா பேசிக்கிட்டாங்க... எல்லா வீட்லயும் வந்து கதவைத் தட்டுறதா சொன்னாங்க... நானும் வெளியூர்க்காரிதானே... அப்புறம் என்ன நடந்ததுங்கற முழுக்கதையும் தெரியலம்மா. பொழுதானா... இந்த வீட்டுப் பக்கம் யாருமே வரதில்லையாம். ரெண்டு வருஷமா பூட்டியேக் கிடந்த வீடு. நீங்க வெளியூர்க்காரங்க, ஒண்ணும் தெரியாதுன்னு, யாரோ உங்க தலையில கட்டிட்டுப் போய்ட்டாங்க.''
அச்சத்தின் உச்சத்தில் இருந்தாள் ராஜி.

♥""நீங்க பயப்படாதீங்க டீச்சரம்மா... சாமிய வேண்டிகிட்டு, நாலு வேப்பிலைக் கொத்து ஒடச்சி; வீட்டு முன்னாடி தொங்க விடுங்க; காத்து கறுப்புன்னு எதுவும் அண்டாது.''
கீரைக்காரி ஒரேடியாகப் பயமுறுத்திவிட்டுப் போனாள். எல்லாவற்றையும் அஜய்யிடம் சொல்லி அழுதாள் ராஜி.
தனக்கு வீடு பார்த்துக் கொடுத்த புரோக்கரை, அன்று இரவே, தன்னுடன் அழைத்து வந்திருந்தான் அஜய்.
""இன்னும் கமிஷன் வேணும்னா கொடுத்திருப்பேனே! இப்படி பேய் வீட்டை எங்க தலையில கட்றதுக்கு, உங்களுக்கு எப்படி மனசு வந்தது?'' கேட்டான் அஜய்.
தலையில் அடித்து சத்தியம் செய்தார் புரோக்கர்.

♥""இப்பதான்யா... இப்படியொரு விஷயம், வீட்டைப் பத்தி கேள்விப்படறேன். அதுவும், நீங்க சொல்லித்தான் தெரியும். இந்த வீட்ல பட்டாளத்துக்காரர் இருந்ததாகவோ, அவர் இறந்து போய்ட்டதாகவோ, ஹவுஸ் ஓனர் என்கிட்ட எதுவும் சொல்லல தம்பி. இதுக்கு முன்னாடியும், இந்த வீட்ல ஒரு வாத்தியார் குடும்பம் இருந்ததுன்னுதான் சொன்னாங்க... நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க தம்பி... இன்னைக்கு ராத்திரி, நானும் இங்க இருந்து, நீங்க சொல்றதை கவனிச்சுப் பார்க்கறேன்...''

♥பவ்யமாக பேசிக்கொண்டிருந்தார் புரோக்கர்.
அன்றிரவு சரியாக பன்னிரெண்டு பத்துக்கு, கதவு அதிர ஆரம்பித்தது, கதவு படபடவென்று ஆடியது. புரோக்கருக்கு வியர்த்துக் கொட்டியது. தோளில் கிடந்த துண்டை எடுத்து நெற்றியில் ஒற்றிக் கொண்டார். மூன்று பேரும் கதவருகே போய் நின்றனர். கதவு தானாக ஆடியது.
புரோக்கர் தூரத்தில், ஏதோ ஒரு சப்தம் கேட்பதைக் கவனித்தார். சீராக ஐந்து நிமிட இடைவெளியில், ஏதோ வெடிக்கிற சப்தமும், உடனே கதவு ஆடுவதும், என ஒரே சமயத்தில் நடந்தது.

♥புரோக்கர் இரண்டு கதவுகளையும் ஆட்டிப் பார்த்தார். இரண்டு ஸ்க்ரூ கழண்டு இருந்தன. புரோக்கர் இவர்களைப் பார்த்து புன்னகைத்தார்.
""கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க... ரெண்டு வயல் தாண்டி, கல்குவாரில பாறை ஒடைக்கறதுக்காக வேட்டு வச்சிருக்காங்க, அது ஒரு பத்து நிமிஷம் வரைக்கும் தொடர்ந்து வெடிச்சிகிட்டே இருக்கும். அந்த பூமி அதிர்ச்சில கதவு ஆடுது. அதுலயும் ஸ்க்ரூ கழண்டு நிக்கறதால, இந்தக் கதவு மட்டும் ஆடுது. நீங்களே பாருங்க, அங்க வேட்டுச் சப்தம் கேட்கறப்ப எல்லாம், இங்க கதவு ஆடும். பத்து நிமிஷத்துக்கு அப்புறம் சப்தமும் கேட்காது, கதவும் ஆடாது... படிச்சப் புள்ளைகளா இருக்கீங்க... இப்படி பயந்தாங்கொள்ளிப் பசங்களா இருக்கீங்களே? இதுல, கீரை விக்கிற கிழவி, எங்கேயோ நடந்த கதையை, இங்க நடந்த மாதிரி சொல்லிருக்கு.''
புரோக்கர் சொல்லி, கேலியாக வாய்விட்டுச் சிரிக்க...
அசடு வழிய, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் அஜய்யும், ராஜியும்.
***
ஆதலையூர் சூரியகுமார்

Post a Comment

0 Comments