♥தாய்ப்பால் கொடுக்கும்போதே கர்ப்பமடைந்தால் என்ன செய்வது
♥'தாய்ப்பால் கொடுக்கும்போதே அந்தத் தாய் மீண்டும் கருவுற்றால் தாய்ப்பால் தருவதைத் தொடரலாமா?' என்ற சந்தேகமும் பலருக்குண்டு. கருவுற்றாலும் தாய்ப்பால் சுரக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால், அடுத்த குழந்தை பிறந்த பிறகும் தாய் விரும்பினால் இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து தாய்ப்பால் கொடுக்கலாம். தாயின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதுடன் கர்ப்பகாலம் நல்லபடியாக இருந்தால், தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர்வதில் தவறில்லை.
♥தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், அவர்கள் கருவுறவே முடியாது என்றும் கூற முடியாது. தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தாய்ப்பாலை உற்பத்தி செய்ய உதவும் `புரோலாக்டின்' (Prolactin) என்னும் ஹார்மோன் உடலில் அதிக அளவில் சுரக்கும். அந்த ஹார்மோன் `ஓவுலேஷன்' (ovulation) என்ற நிலையான சினைப்பையிலிருந்து கருமுட்டை வெளியாவதைத் தடைசெய்யும். இதனால் கருவுற முடியாத சூழல் ஏற்படும். புரோலாக்டின் ஹார்மோனின் அளவு குறைவாக இருந்தால் கருமுட்டை வெளியாவது தடைபடாமல், கருவுறுவதற்கான வாய்ப்பு உண்டு. உதாரணமாக, இரவு முழுவதும் குழந்தை பால் குடிக்காமல் இருந்தால் இத்தகைய நிலை ஏற்படலாம்.
♥பிரசவத்துக்குப் பிறகு, உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றத்தால் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் பெண்களுக்கு மாதவிடாய்ச் சுழற்சியில் சீரற்ற நிலை ஏற்படும். அதனால் கருவுற்றிருப்பதை அறியாமலேயே சில காலம் தாய்ப்பால் கொடுக்கும் நிலை ஏற்படும்.
♥சில தாய்மார்கள், தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களுக்குக் கர்ப்பகால மசக்கை (Morning Sickness) என்னும் வாந்தி அதிகமாகலாம். திட்டமிட்டு உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையைச் சமாளிக்கலாம். கர்ப்பகாலத்தில் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடரும்போது ஆரோக்கியமான சமச்சீரான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சத்துணவு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். மிகத்தீவிரமான வாந்தி ஏற்பட்டால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
0 Comments
Thank you