❤ஆற்றல் உணர்வாய் என் தோழி
❤கயல் போன்ற கண்கள் என்பர் - அக்
கண்களின் தூரநோக்கினை அறியாதோர்..!
❤முழு நிலவிற்கும் சவால்விடுவர்
அவள் முகவனப்பில் மயங்கியோர்.
ஆனால் அதில் ஓடும் ஏக்க அலைகளை உணர்ந்திரார்...!
❤அவள் அகமும் பூவிதழ்களும் ஒன்றென்பர்
அழியா இலட்சியப் புயல் வீசும்
அவள் மனதைப் புரிந்திடாதோர்..!
❤உவமைகள் கூறியே அவள் ஆற்றலை
இடைமறிக்கவும் செய்திடுவர் - ஆனாலும்
உரிமைகளை உதறிவிட்டு...
ஊமையாய் இருந்துவிடாள்....!!
❤மலர் போன்ற மங்கை இல்லை அவள்,
இலட்சியப் பாதையை அடைய - வரும்
தடைகளை உடைத்து வீறுநடை போடும்
பாரதியின் வீரமங்கை என்றே பறைசாற்று
❤சமையலறையில் சாதம் வடிக்க மட்டும் கைகள் இல்லை அவளுக்கு... அது -
சாதனைகள் பல கண்டு - சரித்திரம்
படைக்கக் காத்திருக்கும் கரங்கள் அவை
❤தேனிலும் தித்திக்கும் குரல் மட்டுமில்லை..,
அவள் உரிமைகள் உதாசீனப்படுத்தப்படும் போது.. சினங்கொண்ட சிங்கத்தின் கர்ஜனையும் அவள் குரல்தான்..!!
❤பெண்புத்தி பின்புத்தி என்பதைப் புறந்தள்ளி, வீட்டிற்குள் மட்டுமல்ல நாட்டின் சபைக்கூட்டத்திலும், உன் குரல் தொனிக்கும்வரை போராடு
பார்போற்ற உன்புத்தி கொண்டு வழிநடத்து..!
❤அழகினை வர்ணிக்க
நீ அலங்காரப் பொருளுமல்ல
அவற்றில் மயங்கி வீழ - நீ
அறிவற்ற அரம்பையுமல்ல..!
❤கவலைகளைக் களைந்துவிடு..
கவர்ச்சிதனைக் குறைத்துவிடு..
அறிவைப் பெருக்கிவிடு..
அயராமல் உழைத்துவிடு..!
❤உன் ஆற்றலை மதியில் ஏந்தி,
ஆணவமின்றி நடைபயின்றிடுவாய்..!
இயற்கையின் உன்னத ஆற்றலே..,
பெண்ணே அகிலம் இனி உன்வசமே..!!
0 Comments
Thank you