♥கண்மணியின் கண்ணன்
சிறுகதை
❤"கண்மணி.... கண்மணி...." தோழி சந்தியாவின் குரல் கேட்டது. இரு கைகளாலும் ஈரமான தனது கண்களைத் துடைத்தவள் "வா சந்தியா..." என்றவாறு வராத புன்னகையை கட்டாயப்படுத்தி வரவழைத்துக்கொண்டாள் தனது செவ்விதழ்மேல்.
❤ "என்னாச்சு உன் உதட்டின் புன்னகைக்கும், சிவந்து கனத்த உன் கண்களுக்கும் சம்மந்தம் இல்லையே என்னாச்சு கண்மணி" என்றாள் சந்தியா.
"அதெல்லாம் இல்ல வீட்டில் தூசி படிந்துவிட்டது. துப்பரவு செய்தபோது கண்களில் விழுந்து விட்டது அதுதான்....
ஆமா கண்ணன் எங்க இண்ணைக்கி இங்கால வரலயே" என்று பேச்சை மாற்றிக்கொண்டு சமையலறைப் பக்கம் நகர்ந்தாள். கூடவே சந்தியாவும் சென்றாள்.
❤"அட பார்த்தியா கண்மணி நான் வந்தவிஷயத்தையே மறந்துபோய்விட்டேனே... நாளை மாலை உன் கண்ணனின் பிறந்ததின கொண்டாட்டம் உள்ளது. நீ காலைலயே வந்துவிடு நிறைய வேலை உள்ளது" என்றாள் சந்தியா.
❤"கட்டாயம் வந்து விடுகிறேன்..." என காபி டம்ளரை சந்தியாவிடம் நீட்டினாள். கண்மணியை அணைத்தவாறே "ஆமா உன் மனசில் ஏதோ இருக்கு எப்ப தோணுதோ அப்போ என்கிட்ட சொல்லு கண்மணி. உன்ன கஷ்ரப்படுத்தல" என்றாள் சந்தியா. ஓய்ந்திருந்த கண்கள் ஓடைநீராய் மாறியது.
❤"என் தோழியிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லையே... நீ முதலில் நாளை நடக்கவிருக்கும் பிறந்தநாளை சிறப்பாக செய்வது பற்றி யோசிச்சுக்கோ நான் நல்லா இருக்கேன்" என்றாள்
"சரி கண்மணி நாளை பார்க்கலாம்" என்று அங்கிருந்து மனமின்றி சோகத்துடன் சென்றாள் சந்தியா
❤ஆம் சந்தியாவின் மூன்றாவது பையன்தான் கண்ணன்.
கண்ணா... கண்ணா... என்று கண்மணிக்கு அவன்மேல் கொள்ளைப் பிரியம். அவன் பிறந்தது முதல் அவனைப் பக்குவமாய் பார்த்துக்கொண்டாள். கண்ணனும் அதேபோல் அவள்மேல் உயிராய் இருந்தான். நண்பிகள் இருவரின் வீடும் எதிர்த்தவாறே இருந்தது.
❤கண்ணன் நடைபயில ஆரம்பித்தது முதல் தாய்க்குத் தெரியாமல் திருட்டுத்தனமாய் கண்மணியிடம் ஓடிவந்துவிடுவான். அவள் ஊட்டிவிட்டால் மட்டுமே சாப்பிடுவான். கண்மணி மடியிலேயே கண்ணயர்வான். பெயருக்கேற்றாற்போல் குறும்புத்தனமும் நிறைந்திருந்தது. சந்தியா எவ்வளவு சொல்லியும் அவன் கேட்டபாடில்லை
" கம்ணி.... கம்ணி...." என மழலைக் குரலால் அழைத்தவாறு எந்நேரமும் அவளையே சுற்றிவருவான்.
❤தனது செல்லக்கண்ணனுக்கு பிறந்தநாள் என்பது அவளுக்கு மறந்துபோகுமா என்ன. ஆகையால் அவனுக்காக சிறப்பு பூஜைக்கு எல்லாம் ஏற்பாடு செய்திருந்தாள். பூஜை முடிந்ததும் அவனுக்காக செய்துவைத்த கேக் பார்சலை எடுத்துக்கொண்டு சந்தியா வீட்டிற்குச் சென்றாள்.
❤"சந்தியா... சந்தியா..." கண்மணியின் குரல் கேட்டதும் "கம்ணி..." என்றவாறு ஓடிவந்த கண்ணன் அவள் கால்களைக் கட்டிஅணைத்தான். கேக்கை மேஜைமீது வைத்தவள் கண்ணனை வாரி அணைத்து முத்தமழை பொழிந்தாள். "என் கண்ணா வளர்ந்துட்டானே... நூறு ஆயுள்வரைக்கும் நல்லா இருக்கணும் "னு பிரசாதத்தை நெற்றியில் பூசி கண்களில் சிந்தாதவாறு ஊதிவிட்டாள். கண்மணியின் கழுத்தைக் கட்டியவாறு இரு கன்னங்களிலும் மாறிமாறி முத்தமிட்டான் கண்ணன்.
❤அவன் பிறந்தநாளுக்காய் வீட்டை அலங்கரிக்கும் பணியில் மும்முரமாய் இருந்தாள் கண்மணி. சந்தியா சமையல் வேலைகளைக் கவனித்தாள். இருவரும் தமது கண்ணனுக்காக ஒவ்வொன்றாய் பார்த்துப் பார்த்து செய்தனர். அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட ஆரம்பித்தனர். சோறு, பலகாரம், சுவீட் என ஒருவர்மாறி ஒருவர் கண்ணனுக்கு ஊட்டி மகிழ்ந்தனர்.
❤"கண்ணா இது எல்லாத்திலும் உனக்கு எது ரொம்ப பிடிச்சிருக்கு" என்று சந்தியா கேட்டாள். "கம்ணிட குலோப்ஜாம்.." என்றான் அவள் பக்கம் கைநீட்டியவாறே.
"ஆமாடா... செய்யிறது நானு நீ கண்மணிய சொல்றியா" என செல்லமாக கோபித்துக்கொண்டாள் தாய். இப்படியான செல்லச் சண்டைகள் இவர்களுக்கிடையில் அடிக்கடி வருவதுண்டு.
❤மாலையானதும் உறவினர்கள், அயலவர், நண்பர்கள் என வீடு நிரம்பியது. வந்தவர்கள் "கண்ணனின் பிறந்தநாள் அலங்காரம் சிறப்பாக உள்ளதே... யார் இதெல்லாம் ஏற்பாடு செய்தது" என்று மெச்சினர்.
❤கண்ணன் கண்மணி கொடுத்த கேக்கை கட்பண்ணத் தயாரானான். தந்தை, தாய், அண்ணா, அக்கா என அனைவரும் கூடி நின்றனர். கண்மணி சற்றுத் தள்ளிநின்று வேடிக்கை பார்த்தாள். சந்தியா கண்ணனைத் தூக்கியவாறு "சரி கண்ணா நம்ம கேக் கட்பண்ணலாமா...?" என்றாள். அவணோ "கம்ணி... கம்ணி..." என அருகில் அழைத்தான். அங்கே தான் செல்வது சரியில்லை என எண்ணியவள் விலகியே நின்றாள். அவனோ அழ ஆரம்பிக்க சந்தியா அவளை அருகில் அழைத்தாள்.
❤கேக் வெட்டி முதலில் அம்மாக்கு ஊட்ட சொன்னதும் கண்மணியின் வாய்க்கு நேராக கேக்கை நீட்டினான் கண்ணன். சந்தியாவிற்கு சங்கடமாய்ப் போனது. வந்திருந்தவர்கள் "கண்ணனுக்கு சந்தியா அம்மாவா...? இல்ல இவ அம்மாவா...? இந்த குழந்தைய இப்படி மயக்கி வச்சிருக்காளே..!
ஒரு கலியாணம் காட்சி, குழந்தை குட்டினு இருந்திருந்தால் தானே இவளுக்கு இதெல்லாம் புரியும். அடுத்தவன் குழந்தையை இப்படி தட்டிப்பறிக்க பார்க்கிறாளே... அதுவும் ஆண்குழந்தைய " என சந்தியா, கண்மணி இருவரின் காதுபடவும் பேசினர்.
❤அவற்றைக் கண்டுகொள்ளாத சந்தியா "சரி கண்மணி வாங்கிக்கோ அவன்தான் ஆசையா ஊட்டுறானில்ல ஏன் யோசிக்கிறாய்" என்றாள் சந்தியா.
மனம் வெதும்பிட அதை வெளியே காட்டிக்கொள்ளாது கேக்கை உண்டவள் கண்ணனுக்கும் ஊட்டிவிட்டாள். ஐசிங் படிந்த உதடுகளால் கண்மணியின் கன்னத்தில் முத்தமிட்டான் கண்ணன். அதைத் தொட்டு இரசித்தவாறே சமையலறைப் பக்கம் நடந்தாள் கண்மணி.
❤நேற்றும் இப்படித்தான் அயல்வீட்டு மங்களத்தின் மகள் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்ல வெளியே வந்தபோது கவனிக்காது கண்மணி எதிரில் வந்துவிட்டாள். உடனே மங்களம், மங்களம்பாட ஆரம்பித்தாள். "ச்சா... கடங்காறி என் பொண்ணு புருஷன் வீட்டுக்கு போறப்ப எதிர்க்கயா வரனும், வீட்டில ஒரு ஓரமா கிடக்க வேண்டியதானே. இவ மூஞ்சில முளிச்சுப் போனா என் பொண்ணு வாழ்க்கையும் இவபோல நாசமா போயிடுமே. இரும்மா கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு அப்பறமா கிளம்பலாம்" என கண்மணியின் காதில் விழும்படி மங்களம் எரிந்துவிழுந்தாள். அதனால்தான் நேற்று சந்தியா வந்தப்போ கண்மணி அழுதுகொண்டிருந்தாள்.
❤அதை கேட்டுக்கொண்டு வந்த சந்தியா மங்களத்திடம் "சகுணம் பார்ப்பது அடுத்தவர் முகத்தில் இல்லை, கண்மணியின் அன்புநிறைந்த மனம், எல்லோர்க்கும் ஓடிச்சென்று உதவும் குணம் யாருக்கும் வராது. நீங்களே உங்கள் வாயால் உங்க பொண்ண சபிச்சு அனுப்புறீங்க என்றத மறந்திடாதீங்க" என்று கூறிவிட்டுத்தான் கண்மணியை பிறந்தநாளுக்கு அழைக்கவந்தாள். அதனாலேயே அழுதுகொண்டிருந்த கண்மணியிடம் அவள் எதுவும் கேட்கவில்லை.
❤இதுபோன்ற பல சம்பவங்கள் அவ்வப்போது கண்மணியின் மனதை ரணப்படுத்திச் செல்லும். அவளுக்கு இது ஒன்றும் புதிதல்ல. சிலசமயம் தன்னைத்தானே நொந்துகொள்வாள்.
❤தனிமையில் ஏதோசிந்தனையில் நின்றவளின் தோளில் சந்தியா கைவைத்ததும் நினைவிற்கு வந்தவள்
"எல்லாரும் கேக் சாப்பிட்டாங்களா, டீ ஆத்தி வச்சிருக்கு எல்லாருக்கும் கொடுக்கட்டுமா சந்தியா" என்றாள் கண்மணி.
❤"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் உனக்கு என்மேல் பாசம் இருக்கா கண்மணி..?" என்றாள் சந்தியா
"சந்தியா இதென்ன கேள்வி நீ என்னோட உயிர்த்தோழி இப்படிக் கேட்கிறாயே..." என்றாள்.
"அப்போ நான் என்ன சொன்னாலும் கேட்பியா கண்மணி" என்றாள்.
"நிச்சயமாக கேட்பேன் சொல் சந்தியா நான் என்னசெய்ய வேண்டும்??" என்றாள் கண்மணி.
"என்னுடன் வா...." என்றவள் கண்மணியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் எல்லோர் முன்னிலையில் நிறுத்தினாள்.
❤"எனது மகனின் பிறந்ததினத்திற்காக வந்த எல்லோருக்கும் நன்றி. இண்ணைக்கி ஒரு முக்கியமான விஷயத்தை உங்க எல்லார்கிட்டையும் சொல்ல ஆசைப்படுறேன், என் கணவரின் அனுமதியுடன்..." என்றாள் சந்தியா.
கண்மணிக்கு ஒன்றும் புரியவில்லை "என்னாச்சு சந்தியா என்னை எதற்காக இங்கு அழைத்துவந்தாய்" என்று சந்தியாவின் கைப்பிடியிலிருந்து விடுபட முயற்சித்தாள். கண்மணியின் கேள்விக்கு பதில்கூறும் எண்ணம் சந்தியாவிடம் இல்லை. மேலும் பேச ஆரம்பித்தாள்.
❤"இன்றுமுதல் கண்ணன் கண்மணியின் குழந்தை. இது நானும் என் கணவரும் மனதார எடுத்த முடிவு" என்றாள் சந்தியா.
கண்மணி அதிர்ந்து போய் சந்தியாவையே பார்த்தவாறு நின்றாள்.
"இன்றுமுதல் கண்ணனின் எல்லா தேவைகளையும் பூர்த்திசெய்பவள் கண்மணியே... அவளை அநாதை, ராசி இல்லாதவள் என்று இனிமேல் யாரும் சொல்லமுடியாது அவளுக்கென ஒரு மகன் இருக்கிறான்" என்று உரத்துச்சொன்னாள் சந்தியா.
❤வந்திருந்த அனைவரும் வாயடைத்துப் போயினர். கண்மணி சந்தியாவைக் கட்டியணைத்து "ஏன் சந்தியா இப்படியொரு முடிவெடுத்தாய், மகனைப் பிரிந்து எப்படி இருப்பாய்? இல்ல அவன்தான் உன்னைவிட்டு எப்படி இருப்பான்? என்று அழ ஆரம்பித்து விட்டாள்.
❤கண்மணியை கட்டித்தழுவி அவள் தலைதடவியவாறே "இல்லை கண்மணி இனிமேலும் உன் கண்ணீரைப் பார்க்கும் ஷக்தி என்னிடம் இல்லை. கண்ணன் எங்கு போயிடப்போறான்? என் கண்மணிகூட தானே இருக்கப்போறான். அதுமட்டுமில்லாமல் அவன் பிறந்தது முதல் நீதானே அவனை பார்த்துக்கொள்கிறாய். எனக்கு சந்தோஷம்தான். என்னை விட நீதான் அவனுக்கு நல்ல அம்மாவாக இருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு கண்மணி. என்தோழிக்காக என்னால் முடிந்தது.... எங்க சிரி...☺" என்றவாறு அவள் நாடியை தடவி நெற்றியில் இதழ்பதித்தாள் சந்தியா.
❤கண்மணியின் கைவிரலை ஓர் பிஞ்சுக்கை பற்றியவாறு
"அம்மா..... "
என்றழைத்தது. கண்மணி உறைந்துபோனாள். அது கண்ணனின் குரல்தான். அவனை அள்ளிஅணைத்து மார்போடு கட்டித்தழுவினாள்.
"கண்ணா..... எங்க இன்னொருதடவ சொல்லு!!" என்றவள் அவன் மழலை மொழிகேட்க கண்களில் ஆனந்தக்கண்ணீருடன் காத்திருந்தாள்.
❤"அம்மா... அழாதீங்கம்மா..."
என்றவாறு தனது பிஞ்சுக்கைகளால் கண்மணியின் கண்ணீரைத் துடைத்தான் அவளது செல்லக்கண்ணன்.
"உன் வாயால் எனை அம்மா... என்று அழைக்க நான் என்ன தவம் செய்தேனடா என் கண்ணா...." என்று தனது குழந்தையை அணைத்துக்கொண்டாள் கண்மணி😊
0 Comments
Thank you